உஸ்பெகிஸ்தான் பெண்கள் இலங்கையில் பாலியல் தொழில்?

உஸ்பெகிஸ்தானில் இருந்து பெண்கள், ஹோட்டல்களில் அல்லது குழந்தைப் பராமரிப்புப் பணியாளர்களாக வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, பாலியல் ரீதியான தொழில்களுக்காக இலங்கைக்கு அழைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உஸ்பெகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட பல பெண்களுக்கு கடந்த சில மாதங்களாக உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கையில் மனித கடத்தலை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த பெண்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான விசா மூலமாகவோ அல்லது வேலை வாய்ப்புக்கான விசா மூலமாகவோ இலங்கைக்கு பாலியல் தொழில்களில் ஈடுபடுத்துவதற்காக அழைக்கப்பட்டு வருவதாக குறித்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மறுப்பு தெரிவித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஏனெனில் அவ்வாறு விசாரணைகளுக்கு ஒத்துழைக்கும் பட்சத்தில், தீர்ப்பு வழங்கப்படும் வரை அவர்கள் 2 – 3 ஆண்டுகள் வரை இலங்கையில் தங்கியிருக்க வேண்டும் என்பதன் காரணமாக விசாரணைகளுக்கு அவர்கள் மறுப்பு தெரிவித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த சில நாட்களாக இலங்கை பெண்கள் சீனர்களால் திருமணம் செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டு, சீனாவில் பாலியல் தொழில்களுக்கு அமர்த்தப்படும் சம்பவங்கள் தொடர்பிலும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதுதொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

உஸ்பெகிஸ்தான் பெண்கள் இலங்கையில் பாலியல் தொழில்?

Social Share

Leave a Reply