ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அக்கிராசன அரச கொள்ளை உரையில் கடந்த காலங்களில் ஆட்சி புரிந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை குறைக்கூறியிருக்கும் வகையிலே அவரது சிம்மாசன உரை அமைந்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் எம்.பி தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கம் என்பதற்கு பதிலாக முந்தைய அரசாங்கள் நிலையான தீர்வுகளை முன்வைத்து செல்லவில்லை என ஜனாதிபதி தெரிவித்திருந்தமையானது, அவரது அண்ணன் மஹிந்தவின் அரசாங்கத்தை குறைக்கூறுவதாகவே அமைந்துள்ளது என்றும் ஆனால், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தற்போதைய அரசாங்கத்திற்கு வழங்கியவர் மஹிந்த ராஜபக்ஷவே என்றும் தெரிவித்தார்.
அத்துடன், ஒன்பதாவது பாராளுமன்றின் இரண்டாவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய அக்கிராசன அரச கொள்கை உரையில் எந்தவிதமான கொள்கைகளும் முன்வைக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதின் கொள்கை உரை மீதான முதலாவது விவாதத்தில் நேற்று (19/01) கலந்துகொண்டு உரையாற்றும் போது சுமந்திரன் எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.
சுமந்தரன் எம்.பி தொடர்ந்தும் உரையாற்றுகையில், ‘ஜனாதிபதியின் கொள்கை உரையில் சில சிக்கல்கள் கண்டறிப்பட்டு முன்வைக்கப்பட்ட போதும், அவற்றுக்கான உரிய பதில்கள் வழங்கப்படவில்லை. அதற்காக ஒதுக்கப்பட்டிருந்த நேரமும் மிக அதிகமாகும் என்பதை நான் உணர்ந்தேன்.
ஜனாதிபதி அவரது உரையில் அந்நிய செலாவணி வீழ்ச்சி காரணமாக நாடு பொருளாதார ரீதியாக சரிவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார். பல அரசாங்கங்கள் நிரந்தரத் தீர்வை வழங்கத் தவறிய ஒரு பிரச்சினையின் உச்சக்கட்டத்தை இன்று நாம் எதிர்கொள்கிறோம். அவர் கடந்த அரசாங்கத்தை மட்டும் குறை கூறவில்லை. முந்தைய அரசாங்கங்களை அவர் குற்றம் சாட்டினார். கடந்த காலத்தில் இன்னும் இரண்டு அரசாங்கங்களை நோக்கி சென்றால் மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தையே அவர் குறைக்கூறியுள்ளார்.
கடந்த பதினைந்து வருடங்களை எடுத்துக்கொண்டால் அது அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினுடையது. அத்துடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினுடையதாகும்.
ஆனால் ஜனாதிபதி உரையாற்றுகையில், கடந்த கால அரசாங்கங்கள் நிலையான தீர்வுகளை வழங்கத் தவறிவிட்டதாகவும் கூறினார். அவர்; சில பிரச்சினைகளை அடையாளம் கண்ட போதும் அதனை வேறொருவரின் தோல்களின் மீதே சுமத்துகிறார். ஆனால் அவற்றுக்கான முறையான தீர்வுகளையோ உரிய வழிவகைகளையோ காட்டவில்லை. ஜனாதிபதி முதலில், கண்டறிப்பட்ட பிரச்சினைகளுக்கு மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் உரிய தீர்வுகளையே முன்வைத்திருக்க வேண்டும்.
மக்களுக்கு பாரபட்சமின்றி வசதிகளை வழங்குவதே நல்லிணக்கத்திற்கான அரசாங்கத்தின் பொறுப்பாகும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இது முழுக்க முழுக்க வடக்கு மக்களை சுட்டிக்காட்டி கூறியவொன்றாகும். ஆனால் இது சம உரிமைகளுக்காக போராடும் அம்மக்களை அவமதிக்கும் கூற்றாகும். மேலுமொரு முக்கியமான விடயம் யாதெனில், எமது மக்கள் அடிப்படை வசதிகளுக்காக போராடவில்லை. மாறாக அவர்கள் சம குடியுரிமைக்காகவே போராடி வருகின்றனர்.
மேலும் வடக்கு – கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு குறைந்தபட்சம் தற்காலிக ஒத்துழைப்புகளையாவது வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார். தற்காலிக ஒத்துழைப்புகள் என்பதில் ஜனாதிபதி தெரிவிக்கும் அர்த்தம் யாது?
நாம் பிறர் சொல்வதை கேட்க மாட்டோம். நாம் எமது மக்கள் சொல்பவற்றுக்கே செவி சாய்ப்போம். அதனால் நாம் கூறுவது வெறும் வாயில் இருந்து வரும் வார்த்தைகளாக மாத்திரம் இருக்காது. மக்கள் எமக்கு வழங்கியிருக்கும் ஆணைகள் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை வழங்குவதிலேயே தங்கியுள்ளது’ எனத் தெரிவித்தார்.
