இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் அதிக விலைக்கு எரிபொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொது சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க பாராளுமன்ற பொது நிறுவனங்களின் குழு(கோப்) முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் வாங்கும் விலை, டொலர் போன்றவற்றை கணக்கெடுத்து, அதற்கான வரிகளையும் சேர்த்தால் சராசரியாக 250 ரூபாவுக்கு எரிபொருட்களை வழங்க முடியுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார். அரசாங்கம் ஜூலை 01 ஆம் திகதி கொள்வனவு செய்துள்ள எரிபொருளுக்காக கிட்டத்தட்ட 280 ரூபா வாரியாக அறவிடுவதாகவும் கூறியுள்ளார்.
வலுசக்தி அமைச்சரினால் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ள சூத்திரத்தின் அடிப்படையில் இந்த கணக்கெடுப்புகளை சரியான முறையில் செய்தால் எரிபொருட்களின் விலைகளில் பாரிய வித்தியாசம் காண்ப்படுவதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
தரவுகளின் அடிப்படையில் பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவை சராசரியாக 250 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியுமெனவும் கூறியுள்ள ஜனக ரத்நாயக்க, இது தனது தனிப்பட்ட கருத்து என்பதனையும் தெரிவித்துள்ளார். அத்தோடு பொது சேவைகள் ஆணைக்குழுவின் மற்றைய உறுப்பினர்கள் இந்த விடயம் தொடர்பில் அறிந்திருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் நிதியமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 06 ஆம் திகதி கோப் தலைவர் கலாநிதி சரித்த ஹேரத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. “நாடு எதிர்கொண்டுள்ள எரிபொருள் சிக்கல் நிலைமையில் இந்த விடயமானது முக்கியமானது” என தெரிவித்துள்ள கோப் தலைவர், “இந்த விடயம் தொடர்பில் வலுசகதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சின் அதிகாரிகளையும், பொது சேவைகள் ஆணைக்குழுவின் தலைவரையும் ஆய்வு செய்வதற்காக எதிர்காலத்தில் கோப் முன்னிலையில் எதிர்பார்ப்பதாகவும் கோப் தலைவர் தெரிவித்துள்ளார்.