வரப்போகிற புதிய அரசியலமைப்பு சர்வஜன வாக்கெடுப்புக்கு விடாமலே நிறைவேற்றுவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன என தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
அரியாலையில் நேற்றைய தினம் (24/01) ‘தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13ஆம் திருத்தச் சட்டத்துக்குள் முடக்கும் சதி முயற்சியை தோற்கடிப்போம்’ எனும் தலைப்பிலான அரசியல் விளக்க கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ‘வரப்போகின்ற புதிய அரசியலமைப்பு ஏற்கனவே தயாரிக்கப்பட்டு ஜனவரி மாத இறுதியில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பாராளுமன்றில் விவாதிக்கப்பட்டு சர்வஜன வாக்கெடுப்புக்கு வழங்காமலேயே புதிய அரசியலமைப்பு நிறைவேறுவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன.
வரவு – செலவுத்திட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் அரசியலமைப்பு தயாரிப்பில் ஈடுபட்ட அரசாங்கத்தின் சட்டத்துறை சார்ந்த மிக முக்கிய உறுப்பினரை சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.
அவரிடம் நான் கேட்டேன். புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்புக்கு போகுமா என்று கேட்டபோது, இலங்கையின் நிறைவேற்றப்பட்டு இருக்கின்ற அனைத்து அரசியல் அமைப்புகளும் 2/3 பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் மட்டும் நிறைவேற்றப்பட்டது போன்றே புதிய அரசியலமைப்பு 2/3 உடன் நிறைவேற்றப்படும். அதனால் சர்வஜன வாக்கெடுப்புக்கு போகவேண்டிய தேவையில்லை.
2/3 பெரும்பான்மையுடன் அரசியலமைப்பு நிறைவேற்றப்படுகின்ற போது பாராளுமன்றத்தில் இருக்கக்கூடிய வடக்கு – கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய வாக்கு முக்கியமானது.வட – கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் 18 பேர் இருக்கிறார்கள்.
5 பேர் அரசாங்கத்துடன் நேரடியாக பங்காளிகளாக இருக்கின்றனர். அந்த ஐவரும் நிச்சயமாக அரசாங்கம் கொண்டு வருகின்ற புதிய அரசியலமைப்பை ஆதரிக்கப் போகிறார்கள்.
மீதி 13 பேரிலே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இருவரைத் தவிர தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 10 பேரும் விக்னேஸ்வரனும் இவ்வளவு காலமும் நிராகரித்த 13ஐ ஏற்றுக்கொள்கின்ற ஒரு முடிவில் இருக்கின்றார்கள்.
கூட்டமைப்பும் விக்னேஸ்வரனும் புதிய அரசியலமைப்பில் அரசாங்கம் 13ஆம் திருத்தத்தை நீக்க இருக்கின்றது என்றும் அது இல்லாமல் போவதற்கான வாய்ப்பு இருக்கின்றது என்றும் அதனால் தான் நாங்கள் 13ஆம் திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்குறோமே தவிர அதை நாங்கள் தீர்வாக ஏற்கவில்லை என்று எங்களிடம் கூறுகிறார்கள்.
புதிய அரசியலமைப்பு சர்வஜன வாக்கெடுப்புக்கு விட போவதில்லை என்று சொன்னால் அவர்களது துரோகச் செயலை நாங்கள் அனுமதிக்க முடியாது. அதனால்தான் நாங்கள் மக்கள் சந்திப்புக்களை நடாத்தி இந்த உண்மைகளை மக்களுக்கு கூறுகின்றோம்” எனத் தெரிவித்தார்.
