தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பிலும், பிரதமர் பதவிக்கு ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பது தொடர்பிலும் செய்திகள் மீண்டும் வெளியாகி வருகின்றன.
சிங்கள ஊடகங்கள் இந்த செய்திகளை வெளியிட்டு வருகின்றன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து விலகி ரணிலுக்கு இடம் வழங்குவார் என்ற செய்திகளும் வெளியாகியுள்ளன. இவை ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகளாக வெளியாகி வருகின்றன.
பிரதமராக ரணிலை நியமிப்பதன் மூலம் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைக்குமெனவும், இந்த மாற்றம் சர்வதேச ரீதியில் மாற்றங்களையும், இலங்கை தொடர்பில் உருவாகியுள்ள எண்ணங்களை மாற்றுமென்வும் பலர் நம்புவதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தான் பிரதமராக பதவியேற்கும் வாய்ப்புகளில்லை என தெரிவித்திருந்தார். அரசியல் நகர்வுகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கும் நிலையில் இலங்கையில் எதுவும் நடக்கும் என்ற நிலையே காணப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் ஆட்சியினை முன்கொண்டு செல்ல விரும்பினால் தான் தனது அமைச்சு பதவியினை விட்டு கொடுக்க தயாராக இருப்பதாக இளைஞர் விவகார, விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று தெரிவித்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
