பிரதமரின் தலைமையிலான அரசுக்கு முழுமையான ஆதரவு வழங்குவதாக ஆளும் பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏகமனதாக முடிவெடுத்துள்ளதாக பிரதமர் அலுவலக செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்று காலை பாராளுமன்ற கட்டட தொகுதியில் நடைபெற்ற ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படுமென அமைச்சர்கள் தெரிவித்துள்ளதாகவும் பிரதமர் ஊடக பிரிவு அறிவித்துள்ளது. மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் விரைவில் வழங்கப்படவுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் பிரச்சினைக்கும், மின்தடைக்கும் ஓரிரு வாரங்களில் முடிவு கிடைக்குமென வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ள அதேவேளை, எரிபொருள் பிரச்சினைக்கும் 2 வாரங்களில் முடிவு கிடைக்குமென கல்வியமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளிலிருந்து வெளியேறி பெற்றுக்கொடுத்த ஆரதவிற்கு கட்சியின் சகல உறுப்பினர்களும் நன்றிகளை தெரிவித்த அதேவேளை, புதிய அமைச்சர்கள் எதிர்கால நடவடிக்கைகளை வலுவாக முன்னெடுத்து செல்வதற்கு தேவையான ஒத்துழைப்பை பெற்றுக்கொடுப்பதாக உறுப்பினர்கள் இதன்போது தெரிவித்ததாக மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தை சீர்குலைக்கும் பொய்ப் பிரசாரங்களின் மூலம் அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் சில குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும், கட்சி உறுப்பினர்கள் என்ற வகையில் அரசாங்கத்தை சீர்குலைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் எனவும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் நம்பிக்கை வெளியிட்டனர்.
