சிங்கள மக்களுக்கெதிராக துப்பாக்கிகள் திரும்புமென பிரபாகரன் கூறியிருந்தார் – ஸ்ரீதரன் MP

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் சிங்கள மக்களை ஒரு போதும் எதிர்க்கவில்லை. அவர்களது கலாச்சரத்தையும், பண்பாட்டையும் மதித்தவர் என கூறியுள்ளார் என தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் இன்று தனது பாராளுமன்ற உரையில் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு எதிராக காட்டப்படும் துப்பாக்கிகள், எங்கள் தமிழ் மக்கள் மீது நடைபெறும் அநீதிகள் சிங்கள மக்களுக்கு எதிராக திரும்பும். அப்போது சிங்கள மக்கள் உங்களை பற்றி புரிந்து கொள்வார்களென தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் தீர்க்க தரிசனமாக கூறிய வார்த்தைகள் தற்போது தெளிவாக நடைபெறுகின்றன என பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளார்.

“ராஜபக்ஷ குடும்பத்தினர் தேர்தலில் போட்டியிட்ட காலங்களில் தமிழ் மக்கள் எதிராக வாக்களித்தனர். தமிழ் மக்கள் ராஜபக்ஷ குடும்பத்தினர் இந்த மண்ணிலே ஆட்சி செய்ய வல்லமையற்றவர்கள். இனப் படுகொலையாளிகள் என்ற தீர்ப்பை வழங்கிவிட்டனர். நாங்கள் ஏற்கனவே இந்த தீர்ப்பை வழங்கிவிட்டோம். அந்த நேரத்தில் நீங்கள் மௌனனமாக்கிவிடப்பட்டீர்கள் .

நாங்கள் தமிழர்கள் இந்த நாட்டின் பூர்வீக குடிமக்கள். வடக்கும், கிழக்கும் என்பது எங்கள் வரலாற்று ரீதியான நாங்கள் பிறந்து வளர்ந்து மண். நாங்கள் இந்த நாட்டின் சொந்தக்காரர்கள். விஜயன் இலங்கைக்கு வர முன்னர் இயக்கர், நாகராக தமிழர்களாக பஞ்ச ஈச்சரங்களோடு வாழ்ந்து வந்தவர்கள்.

போராட்டங்களில் ஈடுபடும் சகோதர சகோதரிகளே, வடக்கும் கிழக்கும் தமிழர்களது தாயக மண் என புரிந்து கொள்கிற காலம் எப்போது வரும்? நாங்கள் உங்களோடு சேர்ந்து போராட துடிக்கிறோம். உங்களோடு களத்தில் சேர்ந்து நிற்க விரும்புகிறோம். ஆனால் இந்த பிரச்சினைகள் தீர்ந்ததும் உங்களது நிலைப்பாடு என்ன? தமிழர் தொடர்பில் சொல்லப் போகும் உங்களது செய்தி என்ன?

சிங்களவர்களும், தமிழர்களும் இந்த நாட்டின் தேசிய இனம் என்பதனை ஏற்றுக்கொள்கின்ற நாள் எப்போது வரும்? தமிழர்கள் தொடர்பில் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டிருப்பீர்கள்” என்ற கேள்விகளை ஸ்ரீதரன் எழுப்பினார்.

“உங்களது நியாயமான கோரிக்கைகளுக்கு நாங்கள் கைகொடுக்க தயாராக இருக்கிறோம். ஆனால் நாங்கள் நாங்களாகவும், சிங்கள மக்கள் சிங்கள மக்களாகவும் இந்த மண்ணில், இலங்கை எனும் நாட்டில் வாழ எங்களது தேசம் அங்கீகரிக்கபப்ட்டதாக இருக்கும் போதுதான், நீங்களும் நாங்களும் இணைந்து இந்த தேசத்தை கட்டி எழுப்ப முடியுமென்ற திடமான கருத்தை முன் வைப்பதாகவும்” பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தனது உரையில் கூறியிருந்தார்.

சிங்கள மக்களுக்கெதிராக துப்பாக்கிகள் திரும்புமென பிரபாகரன் கூறியிருந்தார் - ஸ்ரீதரன் MP

Social Share

Leave a Reply