ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் எட்டுப்பேர் உயிரிழந்துள்ளதுடன் இருபதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தாக்குதல் நடத்தியவர் இன்று காலை குறித்த பல்கலைக்கழகத்திற்குள் சென்று துப்பாக்கிச் சூட்டினை நடாத்தியுள்ளதுடன், தாக்குதல்தாரி ஒரு பல்கலைக்கழக மாணவரென பொலிஸாரால் இனங்காணப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் தாக்குதல்தாரி கடந்த சில நாட்களின் முன்னரே திட்டமிட்டுள்ளதாகவும், தற்போது தன்னுடைய நீண்டநாள் கனவை நிறைவேற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பின்னர் நீக்கியுள்ளதாக சிலர் தெரிவித்துள்ளனர்.
எனினும் பொலிஸாரின் விசாரணையின் போது, தாக்குதல்தாரியால் இது மத, அரசியல்ரீதியான செயற்பாடில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருட ஆரம்பத்தில் ரஷ்யாவின் ஹஷான் நகர பாடசாலை ஒன்றின் பழைய மாணவனான பத்தொன்பது வயது இளைஞர் ஒருவரால் அந்தப் பாடசாலையில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் இறந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
