இந்நாட்டில் 2005ம் வருடத்தில் இருந்து தலைவிரித்தாடிய ராஜபக்ச அரச பயங்கரவாதம், உச்ச கட்டத்தை அடைந்து, இன்று தன் சொந்த மக்கள் மற்றும் வாக்களித்து ஆட்சியில் அமர்த்திய மக்கள் மீதே அகோரமாக பாய்ந்துள்ளது. அதன்மூலம் ராஜபக்சர்களின் கோர பயங்கரவாத முகம், சகோதர சிங்கள மக்கள் மத்தியில் இன்று அம்பலமாகியுள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
உலகின் மிக அமைதியான 31-நாள் கொழும்பு காலிமுக திடல் போராட்டம், பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகையில் இருந்து கிளம்பி வந்த அரச பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது.
இதனால், இனி இலங்கையர்களின் கோ-ஹோம்-கோதா, கோ-ஹோம்-ராஜபக்ச (GoHomeGota & GoHomeRajapaksasa) என்ற கோஷங்கள், இலங்கையை நோக்கிய சர்வதேச சமூகத்தின் கோஷமாகவும் மாற வேண்டும் என்ற கோரிக்கையினை மனோ கணேசன் முன் வைத்துள்ளார்.
கொழும்பில் இருக்கின்ற மிகப்பல அல்லது அனைத்து வெளிநாட்டு ராஜதந்திரிகளும், கொழும்பு காலிமுகதிடல் போராட்டத்தை, சமகாலத்தில் உலகில் நடைபெற்ற மிக அமைதியான, ஒழுக்கமான போராட்டம் என தனிப்பட்ட முறையிலும், பகிரங்கமாகவும் கூறி இருந்தார்கள்.
இந்நிலையில் இப்போராட்டம் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம், இன்று இலங்கையின் வெட்கமற்ற அரச பயங்கரவாதம் மீண்டுமொருமுறை அம்பலமாகி உள்ளது எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.