கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு தப்பி சென்ற 67 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். திருகோணமலை சல்லி சாம்பல் தீவினூடாக படகு மூலமாக வெளிநாட்டுக்கு செல்ல பயணத்தை ஆரம்பித்த ஒரு குழுவும், திருகோணமலை துறைமுக பகுதியினூடாக பயணத்தை ஆரம்பித்த இன்னுமொரு குழுவும் கடலில் வைத்து கடற்படையினரின் விசேட ரோந்து நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை பகுதியில் 12 பேரும், சல்லிசாம்பல் தீவில் 55 பேரும் கைதாகியுள்ளனர். இவர்களில் 5 ஆட்கடத்தல் முகவர்களும், 7 பெண்களும், 3 சிறுவர்களும் உள்ளடங்குவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. அத்தோடு இவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்மந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களில் கையளிக்கவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை, புத்தளம், கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, கம்பஹா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.