— அகல்யா டேவிட்–
மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கு வழங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் மாவட்டத்திற்குள்ளேயே கடமையாற்றக் கூடியதாக வழங்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸீர் அஹமட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த விடயம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் செவ்வாய்க்கிழமை 21.09.2021 வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச துறையில் நிரந்தர நியமனம் வழங்கும் நோக்குடன் கடந்த 2019 ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பெர் மாதங்களில் பட்டதாரி பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
இவ்வாறு பயிலுனர்களாகக் கடமையாற்றி வந்த 386 பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் ஆளணி அனுமதிக்கமைவாக தற்போது நிரந்தர அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மட்க்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி பயிலுனர்கள் 185 பேருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டு அவர்களில் சுமார் 25 பேர் மாத்;திரமே மாவட்டத்திற்குள் கடமை புரிய இணைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஏனைய சுமார் 160 பட்டதாரிகளுக்கு மாவட்டத்திற்கு வெளியிலேயே நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பில் தற்போது நிரந்தர நியமனம் பெற்றுள்ள பட்டதாரிகளில் பெரும்பாலனவர்கள் பெண்களாவர்.
இவர்கள் திருமணமாகி கைக்குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்ற நிலையில் இவர்களுக்கு வெளி மாவட்டங்களில் நியமனம் வழங்கப்பட்டுள்ளதால் இவர்களது குடும்பக கட்டமைப்பு சீர் குலைந்து குடும்ப வாழ்வு கேள்விக் குறியாகும் நிலை உருவாகும் என்று ஆதங்கப்படுகின்றார்கள்.
எனவே, தற்போதைய கொவிட் நோய்த் தொற்று பரவல் நிலைமையை கருத்திற் கொண்டு மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகளை அவர்கள் பயிலுனர்களாக கடமையாற்றிய அலுவலகங்களிலேயே நிரந்தரமாக கடமையாற்றும் வகையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனத்தை உடனடியாக மாற்றிக் கொடுக்க வேண்டும்.
கிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் பட்டதாரி நியமனங்கள் சொந்த மாவட்டத்திற்குள்ளேயே வழங்கப்படடுள்ளதுடன் அவர்கள் பயிலுனர்களாக கடமையாற்றிய அலுவலகங்களிலேயே நிரந்தர நியமனமும் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர், அம்மாகாண பிரதம செயலாளர், மாகாண நிருவாகத்திற்கு பொறுப்பான பிரதி பிரதம செயலாளர், ஆகியோர் கவனத்திற் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.