ரஸ்சியாவிடமிருந்து இலங்கை எரிபொருள் உதவியினை கோரியுள்ளதாக ரஸ்சியா வெளியுறவு அமைச்சு உறுதி செய்துள்ளது. எவ்வாறு இலங்கைக்கான உதவியினை வழங்குவது என்ற அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் தாம் கவனம் செலுத்துவதாக மேலும் ரஸ்சியா வெளியுறவு துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 19 ஆம் திகதி வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர ரஸ்சியாவிடம் உதவி கோரியது தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே இன்று(27.05) ரஸ்சியா தரப்பு பதில் கிடைத்துள்ளது.
ரஸ்சியா, யுக்ரைன் மோதல் ஆரம்பித்த காரணத்தினாலேயே எரிபொருள் சர்வதேச சந்தையில் விலையேறியது எனவும், இலங்கைக்கான விநியோகம் மேலும் இறுக்கமடைந்தது எனவும் ஆரம்பத்தில் கூறப்பட்டது.
இலங்கைக்கு உதவி வழங்குவது தொடர்பில் உறுதியாக தற்போது எதுவும் கூற முடியாது எனவும், விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளதாகவும், அதனை பற்றி உறுதியான கருத்தினை இப்போதைக்கு கூற முடியாது எனவும் ரஸ்சியாவை மேற்கோள் காட்டி, சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரஸ்சியா, யுக்ரைன் போர் ஆரம்பித்த போது ஐக்கிய நாடுகள் சபையில் ரஸியாவுக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்ட வேளையில், உலகின் பல நாடுகள் எதிர்த்த வேளையிலும் இலங்கை சமநிலை முடிவினை கொண்டிருந்தது. இலங்கை, ரஸ்சியா உறவு நல்ல முறையில் காணப்படுவதனால் இலங்கைக்கான உதவிகளை ரஸ்சியா வழங்கும் என்ற எதிர்பார்ப்புகள் காணப்படுகின்றன.
