ஆதிக்க மனப்பான்மையே குடும்ப பிரச்சினைக்கு காரணம்

நிவேதிதா சிவசோதி

குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருவதை காணமுடிகிறது. குடும்பங்கள் அன்பால் கட்டியமைக்கப்பட்டதா என்பதை விட பொருளாதாரத்தால் கட்டியமைக்கப்பட்டிருக்கிறது என்பதே பொருத்தம். குடும்பத்தின் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் நபர் குடும்ப முடிவுகளிலும் ஆதிக்கம் செலுத்துபவராக இருப்பார்.

ஆண்களின் ஆதிக்கம் குடும்பத்தில் அதிகமாக ஒரு காலகட்டத்தில் இருந்ததற்கும் இன்று அது ஒப்பீட்டளவில் இல்லாமல் போனதற்கும் இதுவும் ஒரு காரணம். தங்கி வாழல் என்னும் முறைமை குறைந்து வரும் ஒரு காலகட்டத்தில் ஆண்கள் குடும்பங்களிடம் செலுத்தி வந்த செல்வாக்கும் குறைந்துதான் வருகிறது.

இலங்கையில் ஒரே நாளில் இரண்டு மரணங்கள் நிகழ்ந்திருந்தது. இரண்டுமே குடும்ப வன்முறை தொடர்பானது. கொடுமைக்கார கணவனுடன் (Abusive husband) உடன் வாழ இனியும் திராணியில்லாத, சட்டப்படி பிரிந்துவிடவும் வழி இல்லாத வலிகளிற்கு பின்னான கொலை அவை இரண்டும். ஒரு பெண் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டு கணவனால் கொடுமைப்படுத்தப்பட்டால் சட்டத்திடம் தீர்வுகள் இருந்தும் அதை பெற்றுக்கொள்ள அத்தனை போராட வேண்டி இருக்கிறது.

குடித்து விட்டு மண்வெட்டியால் மனைவியின் தலையை காயப்படுத்திய கணவனுடன் சேர்ந்து எப்படியாவது வாழவைத்துவிடவே நீதிவான்களும் முயல்கிறார்கள். கணவன் மனைவியை அடிப்பது சாதாரணமாக கொள்ளப்பட வேண்டும் என்று பொலிஸ்மா அதிபரே ஒரு நேர்காணலில் சொல்லி இருந்தார்.

திருமணத்தை ஒரு சமூக கட்டமைப்பாக கொள்ளாது, அது புனிதமான உறவு என்று கலாச்சாரத்துடன் முடிச்சுப்போட்டு சரியான நீதியைப்பெற முடியாமல் கொடுமைப்படுத்தும் கணவன்மாருடன் வாழவே அறிவுரை சொல்லும் சமூகத்தில் இப்படியான கொடூரங்கள் நடக்காமல் என்ன செய்யும்?

கணவன் மனைவி நகைச்சுவைகள் நிறைய கடந்திருக்கிறேன். ஆனால் இந்த மரணங்களை வைத்தும் “நல்ல வேளை எனக்கு திருமணம் ஆகவில்லை” , “நல்ல வேளை என் வீட்டில் கத்தி இல்லை, கம்பில்லை” போன்ற போஸ்டுகளை பார்க்க முடிந்தது.

ஒரு கொலைக்கான பின்னணி ஆராயப்படாமல், அதன் பின் இருந்த வலி, கொடுமைகள், உடல் உளவியல் சிக்கல்கள் எதையும் அறிந்துகொள்ளாமல் எல்லாமே நகைச்சுவையாய் மாறிக்கொண்டு போவது வேதனையாகவே இருக்கிறது.

திருமணம் எந்தப் புனிதமும் இல்லாத ஒரு வசதிக்கான, அங்கீகாரத்திற்கான ஏற்பாடுதானே அன்றி ஒரு கொடுமையான வாழ்வை சகித்துக்கொண்டு வாழவேண்டும் என்ற கற்பிதங்களை கலாச்சாரம் என்று தூக்கித்திரியவே தேவையில்லை.

கணவன் மனைவியை அடிப்பதற்கெல்லாம் விவாகரத்தா, அதற்கெல்லாம பிரிவாஎன்று வியாக்கியானம் கதைக்கும் உரிமையும் ஒருவருக்கும் இல்லை. சட்டம் சரியான தீர்வுகளை கொடுக்க தாமதிக்கும் ஒவ்வொரு தருணமும் இங்கு இப்படியான சம்பவங்களை தவிர்க்கவே முடியாது.

இங்கு நடந்திருப்பது தேவையில்லாத புனிதப்படுத்தல்களிற்கான பிரதிபலன். அனைத்தையும் நகைச்சுவையாகவே கடந்துவிடும் மனநிலை சரியானதா என்றே தெரியவில்லை. ஒரு வன்முறையாளருடன் வாழும் நபர் அதில் இருந்து பிரிந்து செல்ல முடியாத நிலையில் இருந்தால் சட்டமே ஒரு தீர்வாக அமையவேண்டும். இங்கு அதுவும் தோற்றுப்போவதுதான் பிரச்சினை.

தனியாக வாழும் ஏற்பாடுகள் இல்லாமல், பொருளாதார திடம் இல்லாமல் ஆணோ பெண்ணோ திருமணங்கள் பற்றி சிந்திக்கும்போது இன்னும் கொஞ்சம் அதிகமாகவே சிந்தித்து முடிவுகளை எடுக்கலாம்.

–நிவேதிதா சிவசோதி-
சட்ட கல்லூரி மாணவி

ஆதிக்க மனப்பான்மையே குடும்ப பிரச்சினைக்கு காரணம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version