இலங்கையின் முதலாவது பணக்கார நபராக வர்ணிக்கப்படும், பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை ஏற்றுக்கொள்ளவுள்ளார். அவர் பங்குதாரராக, இயக்குனராக இருக்கும் நிறுவனங்களிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ஷ பதவி விலகியதனை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு தம்மிக்க பெரேராவை நியமிப்பதற்கான கடிதத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகல காரியவசம் அனுப்பி வைத்துள்ளார்.
வியாபார நிபுணர் தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டு, பின்னர் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தொழில் நுட்பம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு பொறுப்பினையும் வழங்கவுள்ளதாக செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன.
தம்மிக்க பெரேரா அமைச்சராக நியமிக்கப்பட்டால் அவர் மூலமாக புதிய முதலீடுகள் இலங்கைக்கு வருமென்ற நம்பிக்கை காணப்படுகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலையினை தீர்க்க அவரிடம் புதிய நல்ல திட்டங்கள் இருப்பதாகவும், அவை முன் வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் ஆரம்பத்தில் வெளியாகியிருந்தன.
இவர் பதவியேற்பதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களது முதலீடுகள் மற்றும் அன்னியச் செலவாணி அதிகரிப்பு என்பன ஏற்படும் என்ற நம்பிக்கையிலேயே இந்த நகர்வு முன்னெடுக்கப்படுவதாக நம்பப்படுகிறது.
நேற்றைய மினசார சட்ட நிறைவேற்றதின் பின்னணியிலும் இவரது பங்கு இருக்கலாமென்ற ஊகங்கள் சில வெளியாகியுள்ளன.