ஐக்கிய மகளிர் சக்தியின் ஏற்பாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கொள்ளுப்பிட்டி வீட்டின் முன்னதாக இன்று காலை முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் நிலைக்கு முடிவுகள் இல்லையனெனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஷ குடும்பத்தினரை பாதுகாப்பதற்காக பதவியேற்றுள்ளார் எனவும் குற்றம் சாட்டி போராட்டங்களில் ஈடுபடுகின்றவர்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
போராட்டம் காரணமாக ஹை லெவல் வீதி, தேர்ஸ்டன் கல்லூரிக்கு முன்னதாக தடைப்பட்டுள்ளது. பொலிசார் வீதி தடைகளையிட்டு போராட்டக்காரர்கள் பிரதமரின் வீட்டினுள் நுழையாதபடி பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அதிக பெண் பொலிசாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஐக்கிய மகளிர் சக்தியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திரன் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில், ஐக்கிய மகளிர் சக்தியின் உபதலைவர் உமாசந்திரா பிரகாஷ் உட்பட ஏராளமான பெண்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க வீட்டில் இல்லையெனவும், பாராளுமன்றம் சென்றுவிட்டதாகவும் பொலிசார் போராட்டகாரர்களுக்கு தெரிவித்துள்ள போதும் அவர்கள் போராட்டம் தொடர்கிறது.
