திருகோணமலை, அன்புவெளிபுரத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 47 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் சுவாமி அறையில் காலையில் விளக்கேற்றி விட்டு வீசிய தீக்குச்சியின் தீ மூலமாக, சேமித்து வைக்கப்பட்டிருந்த பெற்றோல் கொள்கலனில் தீ ஏற்பட்டதனாலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் உடல் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிசார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
எரிபொருட்களை சேமித்து வைக்க வேண்டாமென பொலிசார் உட்பட பலர் அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர். அண்மையில் கொழும்பு, கஹதொட்டுவ பகுதியில் இதே போன்று பெற்றோல் சேமித்து வைத்ததில் ஏற்பட்ட விபத்தில் ஒரு குடும்பமே வீட்டோடு தீ பற்றி எரிந்தது. கணவன், மனைவி அந்த இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இன்று காலை அவர்களது ஒன்பது வயது மகள் கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் மரணமாகியுள்ளார். 19 வயதான மகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
எரிபொருட்களை சேமித்து வைப்பதனால் பாரிய இழப்புகள் ஏற்படும் என்பதனை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதன் காரணமாகவே அதற்கான பாதுகாப்புடன் வியாபாரம் செய்யப்படுகிறது. வீடுகள் மற்றும் பிற இடங்களில் எரிபொருள் சேமிப்புக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள்.
