இலங்கை – அவுஸ்திரேலியா டெஸ்ட், இலங்கைக்கு மோசமான தோல்வி

இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி மிக இலகுவான 10 விக்கெட்களினால் வெற்றியினை பெற்றுக் கொண்டது. 2 1/2 நாட்களில் போட்டி நிறைவடைந்துள்ளது இலங்கை ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றத்தை வழங்கியுள்ளது.

அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 5 ஓட்டங்கள் மாட்த்திரமே நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 3 பந்துகளில் 10 ஓட்டங்களை பெற்று வோர்னர் போட்டியினை நிறைவு செய்தார்.

இலங்கை அணி தனது இரண்டாம் இன்னிங்சில் 22.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 113 ஓட்டங்களை பெற்றது. திமுத் கருணாரட்ன 23 ஓட்டங்களையும், பத்தும் நிஸ்ஸங்க 14 ஒட்டங்களையும் பெற்றனர். ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம் 37 ஓட்டங்கள். 76 ஓட்டங்களுக் 10 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டுள்ளன. கொரோனா உபாதை காரணமாக அஞ்சலோ மத்தியூஸ் போட்டியின் நடுவிலே மாற்றப்பட்டார். அவருக்காக விளையாடிய ஓஷத பெர்னாண்டோ 12 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இலங்கை அணியின் பொறுப்பற்ற துடுப்பாட்டம் தோல்விக்கு முக்கியமான காரணமாக அமைந்தது. நுட்பங்களை பாவித்தமை மிக மோசமாக இந்தப் போட்டியில் காணப்பட்டது.

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் நேதன் லயோன், ரவிஸ் ஹெட் ஆகியோர் தலா 4 விக்கெட்களையும், மிட்செல் ஸ்வப்சன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

முதலாவது இன்னிங்சுக்காக அவுஸ்திரேலிய அணி 70.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 321 ஓட்டங்களை பெற்றது. இதில் கமரூன் கிரீன் 77 ஓட்டங்களையும், உஸ்மான் காவாஜா 71 ஓட்டங்களையும், அலெக்ஸ் கேரி 45 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் ரமேஷ் மென்டிஸ் 4 விக்கெட்களையும், அசித்த பெர்னாண்டோ, ஜெப்ரி வன்டர்சாய் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 59 ஓவர்களில் 212 ஓட்டங்களை பெற்றது. நிரோஷன் டிக்வெல்ல 58 ஓட்டங்களையும், அஞ்சலோ மத்தியூஸ் 39 ஓட்டங்களையும், திமுத் கருணாரட்ன 28 ஓட்டங்களையும், பத்தும் நிஸ்ஸங்க 23 ஒட்டங்களையும், ரமேஷ் மென்டிஸ் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் நேதன் லயோன் 5 விக்கெட்களையும், மிட்செல் ஸ்வப்சன் 3 விக்கெட்களையும், மிட்செல் ஸ்டார்க், பட் கம்மின்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

கமரூன் கிரீன் போட்டியின் நாயகனாக தெரிவு செய்யப்பட்டார். அடுத்த போட்டி 08 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

இலங்கை - அவுஸ்திரேலியா டெஸ்ட், இலங்கைக்கு மோசமான தோல்வி

Social Share

Leave a Reply