இலங்கை அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாம் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான இன்றைய (10/7) ஆட்டநேரமுடிவில் இலங்கை அணி பலமான நிலையில் காணப்படுகிறது. அவுஸ்திரேலிய அணியிலும் பார்க்க 67 ஓட்டங்கள் முன்னிலையில் இலங்கை அணி காணப்படுகிறது.
தினேஷ் சந்திமல், கமின்டு மென்டிஸ் ஆகியோரின் இணைப்பாட்டம் இலங்கை அணிக்கு முன்னிலையை பெற்றுக்கொடுத்தது. நேற்றைய தினம் (9/7) திமுத் கருணாரட்ண, குசல் மென்டிஸ் ஆகியோரின் இணைப்பாட்டம் இலங்கை அணிக்கு நல்ல ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தது. தினேஷ் சந்திமல் அவரின் 13 சத்தத்தை பூர்த்தி செய்துள்ளார். அறிமுக வீரர் கமின்டு மென்டிஸ் அவரின் முதற் போட்டியிலேயே 61 ஓட்டங்களை பெற்றார்.
இலங்கை அணி 2 விக்கெட்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்ற நிலையில் மூன்றாம் நாள் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது. முதல் இன்னிங்சில் துடுப்பாடி வரும் இலங்கை அணி 149 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 431 ஓட்டங்களை பெற்றறுள்ளது.
இதில் தினேஷ் சந்திமல் ஆட்டமிழக்காமல் 118 ஓட்டங்களையும், திமுத் கருணாரட்ண 86 ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 85 ஓட்டங்களையும், கமின்டு மென்டிஸ் 61 ஓட்டங்களையும், அஞ்சலோ மத்யூஸ் 52 ஓட்டங்களையும் பெற்றனர். திமுத் கருணாரட்ண, குஷல் மென்டிஸ் ஆகியோர் இரண்டாவது விக்கெட்டுக்காக 152 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். தினேஷ் சந்திமால், கமின்டு மென்டிஸ் ஆகியோர் 133 ஓட்ட இணைப்பாட்டத்தை ஐந்தாவது விக்கெட்டுக்காக பகிர்ந்து கொண்டனர்.
பந்துவீச்சில் மிச்செல் ஸ்டார்க், மிச்செல் ஸ்வெப்சன், நேதன் லயோன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
முதல் இன்னிங்சில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 110 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 364 ஓட்டங்களை பெற்றது. இதில் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 145 ஓட்டங்களையும், மார்னஸ் லபுஷேன் 104 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய 6 விக்கெட்களையும், கசன் ராஜித 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். பிரபாத் ஜயசூரிய அவரின் முதற் டெஸ்ட் போட்டியிலேயே 6 விக்கெட்களை கைப்பற்றினார்.
நாளை (11/7) காலை 10.00 மணிக்கு நான்காம் நாள் ஆரம்பமாகவுள்ளது.