இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாம் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளில் இலங்கை அணி ஒரு இன்னிங்சாலும், 39 ஓங்காளினாலும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இரு நாடுகளுக்குமிடையில் நடைபெற்ற போட்டி தொடர் 1-1 என சமநிலையில் நிறைவடைந்துள்ளது
சந்திமாலின் சாதனை துடுப்பாட்டம், பிரபாத் ஜெயசூரியாவின் சாதனை பந்துவீச்சும் இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது.
இரண்டாம் இன்னிங்சில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி இன்று 41 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 151 ஓட்டங்களை பெற்றது. இதில் மார்னஸ் லபுஷேன் 32 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய 6 விக்கெட்களையும், மகேஷ் தீக்ஷண, ரமேஷ் மென்டிஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
முதல் இன்னிங்சில் 6 விக்கெட்களையும், இரண்டாம் இன்னிங்சில் 6 விக்கெட்களையும் கைப்பற்றி இலங்கை அணிக்காக அறிமுகப்போட்டியில் அதிக விக்கெட்களை கைப்பற்றியவர் என்ற சாதனையை படைத்து
போட்டியின் நாயகனாக பிரபாத் ஜயசூரிய தெரிவு செய்யப்பட்டார். சர்வதேச ரீதியில் அறிமுக போட்டியில் சிறந்த பந்துவீச்சு பெறுதியினை பெற்றவராக பிரபாத் ஜயசூரிய பதிவாகியுள்ளார்.
முதல் இன்னிங்சில் துடுப்பாடிய இலங்கை அணி 181 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 554 ஓட்டங்களை பெற்றது. இதில் தினேஷ் சந்திமல் 206 ஓட்டங்களையும், திமுத் கருணாரட்ண 86 ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 85 ஓட்டங்களையும், கமின்டு மென்டிஸ் 61 ஓட்டங்களையும், அஞ்சலோ மத்யூஸ் 52 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மிச்செல் ஸ்டார்க் 4 விக்கெட்களையும், மிச்செல் ஸ்வெப்சன் 3 விக்கெட்களையும், நேதன் லயோன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
தினேஷ் சந்திமாலின் இரட்டை சத்தம், முதலாவது இரட்டை சதமாகும். அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக இலங்கை வீரரினால் பெறப்பட்ட முதலாவது இரட்டை சதம் என்ற சாதனையை சந்திமால் பெற்றுக் கொண்டார்.
முதல் இன்னிங்சில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 110 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 364 ஓட்டங்களை பெற்றது. இதில் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 145 ஓட்டங்களையும், மார்னஸ் லபுஷேன் 104 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய 6 விக்கெட்களையும், கசன் ராஜித 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். பிரபாத் ஜயசூரிய அவரின் முதற் டெஸ்ட் போட்டியிலேயே 6 விக்கெட்களை கைப்பற்றினார்.
இந்த தொடரின் நாயகனாக தினேஷ் சந்திமல் தெரிவு செய்யப்பட்டார்.
