இலங்கை எதிர் பாகிஸ்தான் – அஞ்சலோ 100

(ச.விமல் – காலி சர்வதேச கிரிக்கெட் மைதானதிலிருந்து)

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (24.07) காலை 9.30 இற்கு நாணய சுழற்சியுடன் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பிக்கவுள்ளது. கடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி இந்த மைதானத்தில் துரதியடித்து வெற்றி பெற்ற கூடுதலான ஓட்டங்கள் என்ற சாதனையை தனதாக்கி பலமான நிலையில் களமிறங்கவுள்ளது.

இலங்கை அணி கடந்த போட்டியில் பந்துவீச்சில் பலமிழந்தமை அணியின் தோல்விக்கு முக்கியமான காரணமாக அமைந்தது. இலங்கை அணியில் பந்துவீச்சில் ஒரு மாற்றம் நடைபெறுவது உறுதி. மகேஷ் தீக்க்ஷன உபாதை அடைந்துள்ள நிலையில், டுனித் வெல்லாலகே அறிமுகம் பெறும் வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது. கமிந்து மென்டிஸ் துடுப்பாடி பந்து வீசக் கூடியவர் என்ற காரணத்தினால் அவருக்கும் வாய்ப்பு கிடைக்கலாம். துடுப்பபட்டத்தில் கொரோனவிலிருந்து மீண்டு வந்துள்ள பத்தும் நிசங்க மீண்டும் அணிக்குள் வந்துள்ளார். இருப்பினும் ஆரம்ப இடம் சிறிது கேள்விக்குறியாகவே உள்ளது. ஒஷாத பெர்னாண்டோ கடந்த இன்னிங்சில் துடுப்பாடிய விதம் இந்த போட்டியில் அவருக்கு இடம் வழங்கும். மற்றைய இடங்களில் மாற்றங்கள் ஏற்படும் நிலை இல்லை.

அவுஸ்திரேலிய அணியுடன் அபாரமான வெற்றியினை பெற்றுள்ள நிலையில், ஒரு போட்டி தோல்வியில் பெரும் மாற்றங்களை செய்ய வேண்டிய தேவையில்லை. இந்தப் போட்டியில் இலங்கை அணி போராட வேண்டும். துடுப்பாட்ட வீரர்கள் அவதானமாக செயற்படவேண்டும். களத்தடுப்பிலும், களத்தடுப்பு வியூகங்களிலும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட போர்ம் மிகவும் அபாரமாக காணப்படுகிறது. குறிப்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அப்துல்லா ஷபீக் தனது டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டது முதல் அபார போர்மில் உள்ளார். கடந்த போட்டியில் தனது கூடுதலான ஓட்டங்களை பெற்று இலங்கை அணிக்கு தலையிடி கொடுத்தார். பாபர் அஸாம் தொடர் போர்மில் உள்ள ஒருவர். இவர்கள் இருவரும் இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடினால் இலங்கை அணிக்கு சிக்கல் நிலையே.

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷஹின் ஷா அப்ரிடி உபாதையடைந்துள்ளார். இதன் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை பாகிஸ்தான் அணி இந்த மைதானத்தில் சேர்க்குமென எதிர்பார்க்க முடியாது. சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் சேர்க்கப்படும் வாய்ப்பே காணப்படுகிறது.
35 வயதான நோமன் அலி இந்தப் போட்டியில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் இன்று தனது 100 ஆவது போட்டியில் விளையாடவுள்ளார். 35 வயதான மத்தியூஸ், 2009 ஆம் ஆண்டு இதே மைதானத்தில், இதே பாகிஸ்தான் அணியுடனேயே டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டார் என்பது முக்கிய வியிடம்.

அந்தப் போட்டியில் 42 மற்றும் 27 ஓட்டங்களை அவர் பெற்றுக் கொண்டார். 1 விக்கெட்டினையும் கைப்பற்றிக் கொண்டார். இலங்கை அணி 50 ஓட்டங்களினால் அந்தப் போட்டியில் வெற்றி பெற்றது. மதித்தியூஸ் இதுவரை 99 போட்டிகளில் 176 இன்னிங்சில் 6876 ஓட்டங்களை பெற்றுள்ளதோடு, 33 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார். 13 சதங்களையும், 38 அரைச்சதங்களையும் அவர் பெற்றுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அஞ்சலோ மத்தியூசுக்கு கெளவரவிக்கும் ஏற்பாடுகளை போட்டிக்கு முன்னதாக செய்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதனாலும், எரிபொருள் விநியோகம் அதிகரிக்கப்பட்டுள்ளதனாலும், இந்தப் போட்டியினை பார்வையிட அதிக பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என நம்பப்படுகிறது.

 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version