முன்னாள் அரச வங்கி ஒன்றின் பொது முகாமையாளர் ஒருவர் வங்கியில் நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் அடைக்கப்பட்டுள்ளார்.
2017 ஆம் ஆண்டு கடவத்தையில் உள்ள அரச வங்கி ஒன்றில் 6 கோடியே 83 இலட்சத்து 34 ஆயிரம் ரூபா நிதியினை மோசடி செய்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 62 வயதான பெண் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். 48 பொய்யான தனி நபர் கடன்களுக்கான விண்ணப்பங்கள் மூலம் இந்த தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
பணம் திருடப்பட்ட வங்கியில், கடன் பிரிவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பெண் கடமையாற்றி தற்போது ஓய்வினை பெற்றுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இன்னுமொரு நபர் தற்போது உயிரோடு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
