நாமல் நெத்மி சந்திப்பு; பத்திரிகைக்கு எதிராக நாமல் முறையீடு

பொதுநலவாய போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற நெத்மி அஹின்சா முன்னாள் விளையாட்டு துறை அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸவினை சந்தித்தமை தொடர்பில் சிங்கள பத்திரிகை ஒன்று வெளியிட்டிருந்த செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் அது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ பொலிஸ் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

வெற்றியாளர் நெத்மி அஹின்சாவுக்கு பாராட்டு விழா ஒன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், தன்னுடைய சொந்த ஊரிலிருந்து அந்த நிகழ்வில் கலந்துகொள்ள தேவையான போக்குவரத்து வசதி இன்மையால் அரசியல்வாதி ஒருவரின் உதவியுடன் விளையாட்டுத்துறை அமைச்சரை சந்திக்கவும் கொழும்பிலுள்ள விழாவுக்கு கலந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் அந்த வாகனத்தின் சாரதிக்கு கொடுக்கப்பட்ட அறிவுரைக்கு அமைவாக நெத்மி மற்றும் அவரது பயிற்றுவிப்பாளரையும் தற்போதைய விளையாட்டுதுறை அமைச்சருக்கு பதிலாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை சந்திக்க அழைத்து சென்றதாகவும், அமைச்சரின் பாதுகாவலர்கள் தங்கள் தொலைபேசிகளை செயலிழக்க செய்ய சொன்னதாகவும், எனவே கொழும்பில் பாராட்டு நிகழ்வு ஏற்பாட்டாளர்களால் நெத்மி மற்றும் அவரது பயிற்றுவிப்பாளரை தொடர்புகொள்ள முடியாமல் போனதாகவும் குறித்த பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை சந்திக்க செல்வதை இவ்விருவரும் அறிந்திருக்கவில்லை என மேலும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பத்திரிக்கை கட்டுரையானது தம்மை அவமரியாதைக்கு  உட்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவும், இந்நாட்டில் மட்டும் அல்லது சர்வதேச ரீதியிலும் அவருடைய பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் உள்ளது எனவும் முன்னாள் அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த கட்டுரை தொடர்பில் பக்கச்சார்பற்ற சரியான விசாரணை ஒன்றை முன்னெடுக்க கோரி தங்கல்லை பொலிஸ் பரிசோதகருக்கு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.  

Social Share

Leave a Reply