தென்னிலங்கைப் பக்கம் சீனா நகர்கின்ற போது, இந்தியாவின் தேவைக்காகவும், ஈழத் தமிழரின் பாதுகாப்பிற்காகவும் வடக்கு- கிழக்கில் இந்தியா நிலை கொள்ள வேண்டிய நிலையேற்படலாம் என முன்னாள் மட்டக்களப்பு மாவட்டத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
“இந்நிலையில் கோட்டபாய ராஜபக்ஷ் இலங்கைக்கு வந்து சாதாரண பிரஜையாக இருக்க முடியாது எனக் கருதுகிறார். ஏனெனில் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்களை விசாரணை செய்யும்படி பல்வேறு தரப்பினராலும் அழுத்தங்கள் விடுக்கப்படலாம். எனவேதான் அதிகாரம் உள்ள பாராளுமன்ற உறுப்பினராக மாறவேண்டிய தேவையுள்ளது” என இன்று(20.08) அவரது மட்டக்களப்பிலுள்ள வீட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
“மேலைநாட்டு ஜனநாயகத்தைப் பொறுத்தவரையில் ஓய்வு பெற்றவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். அவர்களுக்கெதிராகக் குற்றச்சாட் டுக்கள் வருவது குறைவு என்ற நிலை காணப்படுகிறது. ஆனால் தெற்காசியாவில் இலங்கையைப் பொறுத்தமட்டில் அதிகாரம் என்பது அவர்களுக்கு பரிகாரமானதொன்றாக இருக்கின்றது. ஏனெனில் அவர்கள் கடந்தகாலத் தவறுகளிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டிய தேவையுள்ளது” என தெரிவித்த ஸ்ரீநேசன்
“அவர்கள் மீண்டும் இலங்கை வந்து பதவியைப் பெறும் போது போராட்டக்காரர்கள் எவ்வாறு அதனைப் பார்க்கப் போகிறார்கள் என்ற விடயமும் உள்ளது. அவர்கள் அதனை விரும்பமாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன்” என கூறினார்.
இந்த ஊடக சந்திப்பில் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் வெளியிடட கருத்துக்கள்.
சீனா மிகவும் இராஜதந்திர ரீதியாக காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றது. இக்காய்நகர்த்தல் சீனாவுக்கு இந்து சமுத்திரத்தில் பிரவேசிப்பதற்குத் தடையாக இருந்தது விடுதலைப் புலிகள் இயக்கம். இந்நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்குப் பல்வேறுபட்ட உதவிகளை வழங்கி, விடுதலைப் புலிகளை அழிக்க அவர்கள் உதவி செய்திருக்கிறார்கள். இதன் மூலமாக அவர்கள் இந்து சமுத்திரத்தில் நுழைவதற்கான அனுமதிச் சீட்டு கிடைத்திருக்கின்றது. அதை விட இன்னொன்றையும் சீனா செய்திருக்கிறது. அதாவது சாத்தியவள ஆய்வில்லாமலேயே பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங் களுக்கு உதவி செய்திருக்கின்றது. இந்தவகையில் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்குப் 10 ஆயிரம் கோடி ரூபா கொடுத்ததாக பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றது. மத்தள விமான நிலையமும் இதில் உள்ளடங்குகிறது.
இவ்வாறு வருமானம் ஈட்ட முடியாத அபிவிருத்திப் பணிகளுக்கு சீனா உதவி புரிந்திருக்கின்றது. அதனை மறுபக்கமாகப் பார்ப்போமானால் ராஜபக்ஷ் குடும்பத்தினர் தமது மாவட்டம் சார்ந்து பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்திருந்தமை கண்கூடு. இந்நிலையில் கடன் பெற வேண்டிய தேவையேற்பட்டது. கடன் பெறுவதற்காக ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை 99 வருடங்களுக்கு குத்தகை அடிப்படையில் சீனாவிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது. 99 வருடம் எனக் கூறுகையில் அது பல தலைமுறையினர் வாழும் காலமாக வரையறுக்கப்படுகிறது. அந்த ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு தற்போது சீனாவின் உளவுக் கப்பல் வந்திருக்கின்றது. இதன் அடுத்த கட்டமாக சீனாவின் ராணுவம் கூட இங்கு வரும் நிலை காணப்படுகிறது.
இந்தநிலையில்தான் இந்தியாவுக்கு ஒரு பலத்த தலையிடி, சங்கடம் உருவாகியிருக்கின்றது. இந்நிலையில் இந்தியா ஓர் உளவு விமானத்தை இலங்கைக்கு வழங்கியிருக்கின்றது. அந்த உளவு விமானம் இந்தியாவுக்குத் தேவையான உளவு செய்தியை எடுத்துச் செல்லக் கூடும். இவ்வாறான நிலையில் அமைதியாக இருந்த இந்து சமுத்திரப் பிராந்தியம் இப்போது சிக்கலான களமாக மாற்றப்பட்டிருக்கின்றது. ஆகவே அணிசேராக் கொள்கையினைப் பின்பற்றும் அரசாக இலங்கை தன்னைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது.
இப்போது பார்க்கப் போனால் தங்களுடைய அபிவிருத்தி என்ற மாயைக்கும், அவ் அபிவிருத்திக்கூடாகக் கிடைக்கும் கொமிசன் என்ற தேவைக்குமாகத் தற்போது பெருந்தொகைக் கடனைப் பட்டதன் காரணமாக முதலில் உளவுக் கப்பல் வந்திருக்கின்றது.
சிலவேளைகளில் இந்தியாவுக்கும்- சீனாவுக்கும் முறுகல் நிலையேற்பட்டு, சீனா தன்னைப் பலப்படுத்திக் கொள்வதற்காக தனது படைகளைக் கூட, ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் கொண்டு வரக் கூடிய நிலையும் ஏற்படலாம். இந்த நிலையில்தான் இந்தியா இப்போது சிந்திக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்கிறது.
தங்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் பாதுகாப்பாகப் போராட்டக்களத்தில் இருந்தவர்களை இந்தியாவும் தேர்ந்து, இலங்கைக்கு ஒத்துழைப்புக் கொடுத்து, அந்தப் போராட்டத்தை மௌனிக்கச் செய்தது இதன்காரணமாக இப்போது இந்தியாவின் பாதுகாப்பும் கேள்விக் குறியாக்கியுள்ளது.
தென்னிலங்கைப் பக்கம் சீனா நகர்கின்ற போது, இந்தியாவின் தேவைக்காகவும், ஈழத் தமிழரின் பாதுகாப்பிற்காகவும் வடக்கு- கிழக்கில் இந்தியா நிலை கொள்ள வேண்டிய நிலையேற்படலாம் இதன் காரணமாக இந்தியா தலையிடக் கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். இதுதான் சீனக் கப்பலின் வருகையும், அதனால் ஏற்படக் கூடிய சம்பவங்களும் எனலாம்.
அதுமட்டுமல்ல இந்தியா தலையிடுகின்ற போது, இந்தியாவோடு சீனா மோதுகின்ற போது, குவாட் அமைப்பு எனச் சொல்லப்படுகின்ற ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்றவையும் இந்தியாவோடு நிற்கிறது. எனவே இந்நாடுகள் இந்தியாவுக்கெதிராகப் போர் மூழுமாக இருந்தால் அல்லது ஒரு முரண்பாடு உருவாகுமாக இருந்தால் இந்த நான்கு நாடுகளும் சீனாவுக்கெதிராகச் செயற்படுகின்ற வாய்ப்பு இருக்கின்றது.
அமெரிக்காவும் கூட தற்போது இலங்கையில் அபிவிருத்தி என்ற போர்வையில் பல்வேறு முதலீடுகள் செய்து வருகின்ற நிலையில் யுத்தத்துக்கான தீர்வை சொந்த நாட்டவர்களோடு பேசித் தீர்க்காது, யுத்தத்தை வெல்ல பல நாடுகளோடு தொடர்புபட்ட படியால், இப்போது பாரிய பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.