உரிய முறையில் கடமைகளை செய்ய முடியாவிட்டால் வேலையினை விட்டு விலகி உடனடியாக வீட்டுக்கு செல்லுங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் எதிர் காலத்துக்காக அனைவரையும் இணைப்பதே தன் குறிக்கோள் என அனுராதபுர மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் நேற்று(21.08) ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவை இணைந்த அனுராதபுர மாவட்டத்தின் அபிவிருத்தி பணிகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பிலான ஆய்வு கூட்டத்தில், தான் “எவரையும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைய அழைக்கவில்லை எனவும், அனைவரையும் இணைந்து நாட்டை முன்னேற்றவே அழைக்கிறேன்” என ஜனாதிபதி ரணில் மேலும் கூறியுள்ளார். அத்தோடு “மக்கள் ஏற்கனவே இருந்த பழைய அரசியல் முறையினை நிராகரித்து விட்டார்கள்” எனவும் “புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டுமெனவும்” மேலும் கூறியுள்ளார்.
அடிமட்ட நிலையிலிருந்து அரசாங்க அதிகாரிகள் அர்ப்பணிப்போடு கடமையாற்றினால் கிராம அலுவலகர்கள் மட்டத்தில் நல்ல பயன்களை மக்களுக்கு வழங்க முடியுமென ஜனாதிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.