பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மூவருக்கும் தடுப்புக்காவல்

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே உட்பட மேலும் இருவரை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தலதுவ தெரிவித்துள்ளார்.

கடந்த 19 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற போராட்டம் ஒன்றின் போது வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த குணதிலக, மற்றும் கலேவெவ ஸ்ரீதம்மா தேரோ ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் 72 மணித்தியாலங்களுக்கு அவர்கள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மூவரும், பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் படி விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கையளிக்கப்பட்டதாக முதலில் பொலிஸார் தெரிவித்திருந்தனர். அத்துடன் தீவிரவாத செயற்பாடுகளுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பின் தீவிரவாத தடுப்பு பிரிவிடம் விசாரணையை கையளிக்குமாறும் பொலிஸ் மா அதிபர் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் மேரி லோளர் தடுப்புக்காவல் ஆவணத்தில் கையொப்பமிடவேண்டாமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று(21.08) கோரிக்கை விடுத்திருந்தார்.

Social Share

Leave a Reply