முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைப்பிரதேசத்தில் தமிழ் மக்களினுடைய 632 ஏக்கர் காணிகள் அபகரிப்பு செய்கின்றமை மற்றும் நீதிமன்ற உத்தரவை மீறி தொல்பொருள் திணைக்களத்தினர் விகாரை கட்டுமான பணியினை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றமையை எதிர்த்து நேற்றைய தினம்(21.09) குருந்தூர் மலை பகுதியில் மக்கள் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இணைந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இந்த போராட்டத்தின் பின்னர் தொல்பொருள் திணைக்களத்தை சார்ந்தவர்கள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் வருகை தந்து தங்களுடைய கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் தங்களை அச்சுறுத்தும் வகையில் செய்யப்பட்டதாகவும் தெரிவித்து முறைப்பாட்டை பதிவு செய்திருந்தனர்
இந்த முறைப்பாட்டின் பின்னணியில் சுமார் ஆறு பேருக்கு மேற்பட்டவர்களுடைய பெயர் விவரங்கள் போலிசாருக்கு வழங்கப்பட்ட நிலையில் அவர்களிடம் பெயர் வழங்கப்பட்டவர்களில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் இரத்தினராசா மயூரன் ஆகியோரை முல்லைத்தீவு போலிஸ் நிலையம் அழைத்த பொலிசார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தினர்.
முல்லைத்தீவு நீதிமன்றத்தினால் 2022 ஆறாம் மாதம் 12ஆம் தேதியில் இருந்த கட்டுமான பணியை அதே நிலையில் பேணுமாறு உத்தரவு வழங்கப்பட்டிருந்த போதும் அதனை மீறி கட்டுமானம் செய்த தொல்பொருள் திணைக் களத்தை சேர்ந்தவர்கள் பௌத்த மத குரு, இராணுவத்தினர் உள்ளிட்டவர்களை கைது செய்யாத முல்லைத்தீவு பொலிசார் இவ்வாறு ஜனநாயக முறையில் போராட்டம் செய்தவர்களை கைது செய்தமைக்கு எதிராக பொலிஸாரின் அராஜகத்திற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
முல்லைத்தீவு பல நோக்கு கூட்டுறவு சங்க விற்பனை நிலையத்திற்கு அருகாமையில் ஆரம்பமான இந்த கவனயீர்ப்பு பேரணி முல்லைத்தீவு நகரம் ஊடாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் வரை இடம்பெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எமது நிலம் எமக்கு வேண்டும், பொலிஸ் அராஜகம் ஒழிக, ரவிகரன் மயூரனை விடுதலை செய் ,நீதிமன்ற உத்தரவை செயல்படுத்து ,வடக்கு கிழக்கும் தமிழர் தாயகம் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பிரதேச சபை உறுப்பினர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர் .