பாகிஸ்தான் மகளிர் மற்றும் பங்களாதேஷ் மகளிர் அணிகளுக்கிடையில் இன்றைய (03.10) முதற் போட்டி சைல்ஹெட்டில் நடைபெற்றது.
நாணய சுழற்சயில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 70 ஓட்டங்களை பெற்றது. ஷல்மா கதுண் ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். டயானா பெய்க், நிதா தார் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 12.2 ஓவர்களில் 1 விக்கெட்டினை இழந்து 72 ஓட்டங்களை பெற்றது. இதில் ஷிட்றா அமீன் ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இந்த வெற்றியின் மூலம் 4 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி முதலிடத்தை பெற்றுக்கொண்டது.
இரண்டாவது போட்டி இந்தியா, மலேசியா அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 181 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் ஷபேனினி மேஹனா 69 ஓட்டங்களையும், ஷபாலி வெர்மா 46 ஒட்டங்களையும் பெற்றுக்கொண்டார். ஆரம்ப இணைப்பாட்டமாக 116 ஓட்டங்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.
வினிபிரெட் துரைசிங்கம், நுர் தானியா யுஹாதா ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு மலேசியா அணி துடுப்பாடிய வேளையில் மழை குறுக்கிட்டதனால் போட்டி நிறுத்தப்பட்டது. டக் வேர்த் லூயிஸ் முறை மூலமாக இந்தியா அணி 30 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
மலேசியா அணி 5.2 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 16 ஓட்டங்களை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா அணி 4 புள்ளிகளை பெற்று இரண்டாமிடத்தில் காணப்படுகிறது.
நாளை முதற் போட்டியாக இலங்கை நேரப்படி 8.30 இற்கு இலங்கை மற்றும் தாய்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது.