மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை மகளிர் அணி 14 வருடங்களின் பின்னர் தெரிவாகியுள்ளது. 2008 ஆம் ஆண்டு இந்தியா, இலங்கை மகளிர் அணிகளுக்கியிடல் இலங்கையில் நடைபெற்ற ஆசிய கிண்ண தொடருக்கு பின்னர் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
பாகிஸ்தான் மகளிர் அணியுடன் நடைபெற்ற மிக விறு விறுப்பான அரை இறுதிப் போட்டியில் 01 ஓட்டத்தினால் இலங்கை அணி வெற்றி பெற்றது.
இன்று பங்களாதேஷில் நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடியது. 20 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்த இலங்கை அணி 122 ஓட்டங்களை பெற்றது. இதில் ஹர்சிதா சமரவிக்ரம 35 ஓட்டங்களையும், அனுஸ்கா சஞ்சீவினி 26 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர். பந்துவீச்சில் நஷ்ரா சந்து 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 121 ஓட்டங்களை பெற்றது. இதில் பிஷ்மா மஃரூப் 42 ஓட்டங்களையும், நிதா தார் 26 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக இனோகா ரணவீர சிறப்பாக பந்துவீசி 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை கைப்பற்றினார். இவரின் 18 ஆவது ஓவர் சிறப்பாக அமைந்தமை வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது. சுகந்திகா குமாரி, கவிஷா டில்ஹாரி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
இறுதி ஓவரில் 9 ஓட்டங்கள் தேவையென்ற நிலையில் பாகிஸ்தான் அணி 7 ஓட்டங்களையே பெற்றது. இறுதிப் பந்தில் இலகுவான பிடி ஒன்று நழுவ விடப்பட்டு, ரன் அவுட் முறையிலான ஆட்டமிழப்பு ஏற்படுத்தப்பட்டு இலங்கை அணி மயிரிழையில் வெற்றி பெற்றது.