ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இன்று (18.10) நடைபெற்ற 20-20 உலகக்கிண்ண தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி அபாரமான வெற்றியினை பெற்றுக் கொண்டது. இந்த பெரிய வெற்றி மூலம் இலங்கை அணி முதல் சுற்றோடு வெளியேறக்கூடிய அபாய நிலையிலிருந்து விடுபட்டது. அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால் போதும் என்ற நிலை உருவாகியுள்ளது. ஆனால் மழையால் அடுத்த போட்டி கைவிடப்பட்டால் மீண்டும் சிக்கல் நிலை உருவாகிவிடும்.
இந்த தோல்வியின் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளது.
குழு A இல் உயர் ஓட்ட நிகர சராசரி வேகத்தை இலங்கை அணி பெற்றுக் கொண்டது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு அமீரகம் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 152 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணியின் ஆரம்ப இணைப்பாட்டம் சிறப்பாக அமைந்தது. இருப்பினும் மத்திய வரிசை மோசமாக துடுப்பாடியாமையினால் எதிர்பார்த்த ஓட்ட எண்ணிக்கையினை இலங்கை அணி பெறமுடியவில்லை.
பத்தும் நிஸங்க, குசல் மென்டிஸ் ஆகி யோர் 42 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று நல்ல ஆரம்பத்தை வழங்கினார்கள். அதிக ஓட்டங்களை பெற்று மிகப்பெரிய வெற்றி ஒன்று தேவை என்ற நிலையில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் பொறுப்பற்ற முறையில் துடுப்படியாமையால் இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும் சிறப்பான பந்துவீச்சின் மூலம் அந்த பெரிய வெற்றியினை பெற முடிந்துள்ளது.
இந்தியா, தமிழகம், சென்னையில் பிறந்து ஐக்கிய அரபு அமீரகம் அணிக்காக விளையாடும் கார்த்திக் மெய்யப்பன் இந்த உலக கிண்ண தொடரின் முதலாவது ஹட்ரிக் சாதனையினை தனாத்திக்கொண்டார். 4 ஓவர்களில் 19 ஓட்டங்களை வழங்கி 3 விக்கெட்களை கைப்பற்றி இலங்கை அணியினை தடுமாறு வைத்தார்.
தனஞ்சய டி சில்வா சிறப்பான முறையில் துடுப்பாடிய வேளையில் தேவையற்ற ஓட்டம் ஒன்றை பெற முனைந்து ஆட்டமிழந்தார். பத்தும் நிசங்க இறுதி வரை சிறப்பாக துடுப்பாடி இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினார்.
பானுக்க ராஜபக்ஷ, சரித் அசலங்க, தஸூன் சாணக்க ஆகியோர் கார்த்திக் மெய்யப்பனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தவர்கள்.
இறுதி நேரத்தில் இணைந்த பத்தும் நிசங்க, சாமிக்க கருணாரட்ன சிறப்பாக துடுப்பாடி இலங்கை அணி ஓரளவு பலமான நிலைக்கு உயர்ந்தது. பத்தும் நிசங்க ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்
இதுவே அவரின் கூடுதலான ஓட்ட எண்ணிக்கையாகும்.
பந்துவீச்சில் ஷகூர் கான் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பாடிய ஐக்கிய அரபு இராட்சிய அணி 17.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 73 ஓட்டங்களை பெற்றது. இதனால் இலங்கை அணி 79 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
ஐக்கிய அரபு இராட்சியம் சார்பாக அயான் அப்ஷால் கான் 19 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இலங்கை அணியின் பந்துவீச்சில் துஸ்மாந்த சமீர, வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா மூன்று விக்கெட்களை கைப்ற்றினார்கள்.