பாலியல் பலாத்கார குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் ஒரு வருடத்துக்கு நாட்டுக்கு திரும்புவது சந்தேகமென அவரது வழக்கறிஞர் ஆனந்த் அமர்நாத் தெரிவித்துள்ளார்.
இன்று நீதிமன்றத்தில் தனுஷ்க குணதிலகவின் பிணை நிராகரிக்கப்பட்டுள்ளது. அது துரதிஷ்டம் என தெரிவித்துள்ள வழக்கறிஞர், மேல் முறையீட்டு நீதிமன்றில் இது தொடர்பில் முறையிடவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார். மேல் முறையீட்டில் பிணை வழங்கப்பட்டாலும் வழக்கு நிறைவடைந்து அவர் மீண்டும் நாடு திரும்ப ஒரு வருடத்துக்கு மேலாக காலமெடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 02 ஆம் திகதி அவுஸ்திரேலியா பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்த குற்றச்சாட்டின் கீழ் தனுஷ்க 06 ஆம் திகதி அதிகாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக நான்கு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நட்பு இணைப்பு செயலி ஒன்றின் மூலமாக 29 வயதான அவுஸ்திரேலியா பெண் ஒருவருடன் நட்பு ஏற்படுத்தப்பட்டு, இருவரும் பல வழிகளில் தகவல்கள் பரிமாற்றம் செய்துள்ளனர். பின்னர் நேரில் சந்திப்பதற்காக திட்டமிட்டு கடந்த 02 ஆம் திகதி இருவரும் சந்திப்பை மேற்கொண்டு மது அருந்திவிட்டு உணவு அருந்துவதற்காக சென்று பின்னர் தனியான வீடொன்றுக்கு சென்ற வேளையில் தனுஷ்க குணதிலக தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தனுஷ்க குணதிலகவின் இந்த செயற்பாடுகளை அடுத்து அவரை மறு அறிவித்தல் வரை தடை செய்வதாகவும், அணி தெரிவிற்காக கணக்கில் எடுக்கப்படமாட்டார் எனவும் இலங்கை கிரிக்கெட் நிறைவேற்று சபை முடிவெடுத்துள்ளது. நீதிமன்ற விசாரணைகளின் பின்னர், இலங்கை கிரிக்கெட் விசாரணைகளின் அடிப்படையில் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென மேலும் இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. ஆனாலும் தனுஷ்க குணதிலகவிற்கான உதவிகளை இலங்கை கிரிக்கெட் வழங்குமெனவும் தெரிவித்துள்ளது.
இருப்பினும் நீதிமன்ற மற்றும் வழக்கு செலவுகளை, மீள வழங்கும் கடன் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் வழங்குவதாக வழக்கறிஞர்கூறியுள்ளார்.
பல தடவைகள் தனுஷ்க குணதிலகவின் ஒழுக்கமற்ற செயற்பாடுகளுக்காக அவர் தடை செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த பாரிய குற்றச்சாட்டு அவரின் கிரிக்கெட் வாழ்க்கையினை கேள்விக்குறியாக்கியுள்ளது.