ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தான் விமர்சிப்பதனை ஐக்கிய மக்கள் சக்திக்குள் உள்ள சிலர் விரும்பவில்லை என ஐக்கிய மகளிர் சக்தியின் தலைவி ஹிருனிகா பிரேமச்சந்திர கூறியுள்ளார். இது உயர் வர்க்க பேதம் காரணமாக உருவானது என கூறியுள்ள அவர், ஐக்கிய தேசிய கட்சிக்குள் இவ்வாறான உயர்மட்ட பேதம் உயர்ந்து காணப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்த பேதம் J.R ஜெயவர்தனவினால் உருவாக்கப்பட்டது எனவும், அது தற்போது வரை காணப்படுவதாகவும் கூறிய அவர் அதன் காரணமாகவே அந்த கட்சியில் உயர்வர்க்க பேதமுள்ள சிலர் மாத்திரம் மிஞ்சி இருப்பதாகவும் மற்றவர்கள் வெளியே வந்துவிட்டனர் எனவும் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி R.பிரேமதாசவின் காலத்தில் இந்த பேதம் மாற்றப்பட்டு சகலரும் அரசியலுக்கு வரலாம், அதிகாரத்துக்கு வரலாம் என்ற மாற்றம் வந்தது. தற்போது சஜித் பிரேமதாசாவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்குள் அவ்வாறன நிலையே காணப்படுகிறது என கூறிய ஹிருணிகா, ஆனால் சிலருக்கு அந்த உயர் பேத வேறுபாடு காணப்படுவதனால் ரணிலுக்கு எதிராக கோஷம் எழுப்புவதனை விரும்பவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.
தான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வீட்டுக்கு முன்னாள் சென்று மோசமான வார்தைகளினால் கோஷம் எழுப்பும் போது யாருக்கும் அது வலிக்கவில்லை. தெரியவில்லை. ஆனால் பிளவர் வீதியிலுள்ள ரணில் வீட்டுக்கு முன்னால் கோஷம் போடும் போது கேள்வி எழுப்புகிறார்கள். கோட்டாபய கிராமத்திலிருந்து வந்தவர். ரணில் கொழுப்பு, பிளவர் வீதியில் உயர் மட்டத்திலிருந்து வந்தவர், அதன் காரணமாக கேள்வி எழுப்புவர்களுக்கு வலிக்கிறது குற்றம் சுமத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – ஐக்கிய தேசிய கட்சி கூட்டுக்கான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் பேசப்படுகின்றன. அது ஓரு போதும் சாத்தியமாகாது எனவும், ரணிலுக்கு எதிராக கடந்த காலங்களில் எதிர்த்து நின்று தோற்கடித்தவர்கள் பொதுஜன பெரமுனவினரே எனவும் கூறியுள்ளார். ரணில், தான் ஜனாதிபதி பொறுப்பை ஏற்றுக்கொண்டதாக கூறுகிறார். ஆனால் பசில் ராஜபக்ஷ நாமே அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம் என கூறுகிறார் எனவும் ஐக்கிய மகளிர் சக்தியின் தலைவி ஹிருனிகா பிரேமச்சந்திர மேலும் கூறியுள்ளார்.