சுனாமி பேரலை நினைவேந்தல் நிகழ்வுகள் பல இடங்களிலும் நடைபெற்றுள்ளன. வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது சுனாமி நினைவு தூபியிலும் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
வவுனியா, பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தினரால் இந்த நினைவு தூபி 2004 ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டு 31 ஆம் நாள் நிகழ்வுகளுக்காக, பூந்தோட்டம் நகரசபை மைதானத்தில் அமைக்கப்பட்டது.
நகரசபை தலைவர் தேசபந்து இரா.கெளதமன் நினைவை சுடரை ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். ராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தான், மாவட்ட அரச அதிபர் பி.ஏ. சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மாவட்ட உதவி பணிப்பாளர் ஏ.எம்.ஆர்.கே ரத்நாயக்கே , மதகுருமார்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நகரசபை, தெற்கு தமிழ் பிரதேசசபை மற்றும் செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், நகரசபை உறுப்பினர்கள், நரசிங்கர் ஆலயத்தின் தலைவர், பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்ததுடன் நினைவு சுடர்களை ஏற்றி வைத்தனர்.
இன்றைய நிகழ்வில் உயிரிழந்தவர்களிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவு உரைகளும் இடம்பெற்றன.

