முறையான வேலைத்திட்டம் இன்றி தங்கள் விருப்பங்களுக்கேற்ப முட்டைகளை இறக்குமதி செய்வதன் மூலம் “Avian Influenza” எனும் நோய் இலங்கைக்கு வர வாய்ப்புள்ளதாகவும், அவ்வாறு நிகழ்ந்தால் பல சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த சங்கத்தின் தலைவர் கால்நடை வைத்தியர் சிசிர பியசிறி கருத்து தெரிவிக்கையில், முட்டை இறக்குமதியை விரும்பியவாறு முன்னெடுத்தல் வெற்றியடைய முடியாது எனவும், முட்டைகளை இறக்குமதி செய்யும்போது அதிக கவனம் தேவை எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
“திடீரென முட்டையை இறக்குமதி செய்து, குறைந்த விலையில் சந்தைக்குக் கொடுத்தால், நம் தொழில் நலிவடையும். கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையும், தனியார் துறையும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளதையும், நமது நாட்டில் முட்டை மற்றும் கோழித் தொழில் உலகின் சிறந்த தொழில்நுட்ப நிலையை எட்டியதையும் நாம் அறிவோம். சமீப காலமாக, பொருளாதார நெருக்கடியின் சரிவால் மட்டுமே தற்போது நமக்கு இந்நிலைக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.
இந்தத் தொழிலில் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்த நேரத்தில், இந்தத் தொழில் துறையை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதேபோன்று, இலங்கையில் பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் பெரும் பங்காற்றியுள்ளது.
பறவைக் காய்ச்சல் வராமல் தடுக்க கால்நடை மருத்துவர்கள், கால்நடைப் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை என அனைவரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். முட்டைகளை இறக்குமதி செய்வதன் மூலம் அப்படி ஒரு நோய் இந்த நாட்டிற்கு வந்தால் அது மிகவும் பிரச்சினைக்குரிய நிலைமையாக மாறிவிடும். கோழி வளர்ப்பு தொழிலுக்கு மிகெபெரிய சவாலாக அமைந்துவிடும்’. என தெரிவித்துள்ளார்.