மக நெகும திட்டத்தின் தலைவர் மற்றும் பணிப்பாளருக்கு பாற்சோறு தாக்குதல்!

மக நெகும (வீதி நிர்மாண பணி திட்டம்) திட்டத்தின் தலைவர் மற்றும் நிறைவேற்றுப் பணிப்பாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இரண்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேலியகொடையில் உள்ள மக நெகும தலைமை அலுவலகத்தில் நேற்று (02.01) காலை புத்தாண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் வைபவம் ஏற்டபாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த வைபவத்தில் அதன் தலைவர் மற்றும் பணிப்பாளர் மங்கள விளக்கேற்றும்போது அங்கிருந்த ஊழியர்கள் சிலர் பாற்சோறு மற்றும் இனிப்புக்களை அவர்கள் மீது வீசி தாக்கி தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதன் தலைவர் மற்றும் பணிப்பாளரின் தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வாறு செய்துள்ளதுடன், கிட்டத்தட்ட மூன்று மணித்தியாலங்கள் வரையில் அவர்களை வெளியில் செல்ல விடாமல் அலுவலகத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

பின்னர் போலீசார் தலையிட்டு அவர்களை அலுவலகத்தை விட்டு வெளியே அழைத்துச் சென்றதுடன், சம்பவத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில், மக நெகும திட்டத்தின் ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் நிறுவனத்தின் சாரதிகள் சங்கத்தின் தலைவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் போலீசார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

மக நெகும திட்டத்தின் தலைவர் மற்றும் பணிப்பாளருக்கு பாற்சோறு தாக்குதல்!

Social Share

Leave a Reply