கொரோனா தொற்றுநோய் உலகளாவிய ரீதியில் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ள நிலையில், இதுவரையில் பூஸ்டர் (செயலூக்கி) தடுப்பூசியை பெறாதவர்கள் அருகில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) அலுவலகம் அல்லது மருத்துவமனையில் சினோபார்ம் தடுப்பூசியைப் பெறுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 6 மில்லியன் மக்கள் இதுவரையில் தங்கள் பூஸ்டர் தடுப்பூசியை பெறவில்லை என சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பிரதான தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“18 வயதுக்கு மேற்பட்ட 14.2 மில்லியனில் 8.2 மில்லியன் பேர் மட்டுமே இதுவரை பூஸ்டர் டோஸ் பெற்றுள்ளனர். இன்னும் பூஸ்டர் டோஸ் பெறாதவர்கள் சினோபார்ம் தடுப்பூசியைப் பெறலாம். எங்களிடம் 1.8 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன,” என சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகளவில் குறிப்பாக மேற்கு பசிபிக் பிராந்தியமான சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்க போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் நாமும் பாதுகாப்பாக இருப்பது அவசியம் என தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கைக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை என்றாலும் தொற்று நாட்டிற்குள் நுழைவதை தடுக்க முடியாது, ஆனால் தாமதிக்க முடியும், நம்மை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவதே ஒரே வழி என தெரிவித்துள்ளார்.
யாரேனும் ஒருவர் இதுவரையில் முதல் தடுப்பூசியை கூட பெறவில்லை என்றால், அவர்கள் அருகில் உள்ள MOH அலுவலகம் அல்லது மருத்துவமனையில் அதைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
