தேர்தல்கள் ஆணைக்குழுவை ஜனாதிபதி சந்தித்தமைக்கு விமர்சனம்

தேர்தல்கள் ஆணைக்குழுவினை ஜனாதிபதி அழைத்து சந்தித்தமைக்கு தேர்தல் காண்காணிப்பு அமைப்பான பெப்ரல் கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளது.

தேர்தல் ஒன்று நடாத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் ஜனாதிபதி, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை சந்திப்பது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், விதிமுறைகளை மீறிய தேவையற்ற செயல் எனவும் மேலும் குற்றம் சாட்டியுள்ளது.

“இவ்வாறான செயற்பாடு நடைபெற்றிருக்க கூடாது. தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தல் தொடர்பில் அது தொடர்பிலான வேலைகளோடு உள்ள நிலையில், அவர்களுக்கு ஆலோசனைகளை, அறிவுரைகளையோ வழங்க முடியாது. சுயாதீன அமைப்பான தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி எந்தவித அறிவுறுத்தல்களையும் வழங்க முடியாது. இந்த சந்திப்பு ஜனாதிபதி தேர்தலில் தலையிடுகிறார் என்ற பிழையான சமிக்கையினை வெளிப்படுத்துவதாகவும் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளரான ரோஹன ஹெட்டியாராச்சி ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் தேர்தலுக்குள் குழப்பம் விளைவித்து தேர்தலை பிற்போட முனைவதாக குற்றம் சுமத்தியுள்ள குறித்த அமைப்பு, ஜனாதிபதி தேர்தல்கள் ஆணைக்குழுவினை சந்தித்தது தேர்தலுக்குள் தனது செல்வாக்கினை செலுத்த முனைகிறார் என்பது வெளிப்படையாக தெளிவாகிறது என கூறியுள்ளது.

“தேர்தல் திகதி, வேட்பு மனு தாக்கல் அடங்கலாக ஏனைய பல விடயங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பணம் தயாராக உள்ளது. தேர்தலை ஆணைக்குழு நடாத்தும். இலங்கை மட்டுமன்றி உலகமே இந்த தேர்தல் உரிய முறையில் நடைபெறுகிறதா என எதிர்பார்த்துள்ளனர். இவ்வாறான நிலையில் ஜனாதிபதி பிழையான செயலை செய்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குள் எந்த பிளவுகளும் இல்லை” எனவும் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கூறியுள்ளார்.

தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைள் இம்மாதம் 15 ஆம் திகதி முதல் தமது அமைப்பினால் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், முதற் கட்டமாக 400 கண்காணிப்பளர்கள் இலங்கை முழுவதும் தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூறியுள்ள அவர், உள்நாட்டு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் 10,000 பேருடன் அடுத்த கட்ட தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

கடந்த 05 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்த அதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவை பிளவுகளின்று ஒன்றுபட்டு செயற்படுமாறும் அறிவுறுத்தியிருந்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவை ஜனாதிபதி சந்தித்தமைக்கு விமர்சனம்

Social Share

Leave a Reply