ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை எவ்வித முன்னேற்றமும் இன்றி முடிவடைந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமது கட்சி முன்வைத்த தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசாங்கத்துடனான கலந்துரையாடலின் போது, நாங்கள் ஏற்கனவே எமது மக்கள் எதிர்நோக்கும் பல விடயங்கள் குறித்து கலந்துரையாடினோம். மிக முக்கியமாக காணாமல் போனோர் தொடர்பான தீர்வு, அரசியல் கைதிகள் மற்றும் காணி விடுவிப்பு தொடர்பானவை பற்றி பேசினோம். ஆனால் எந்தவொரு தீர்வும் எட்டப்படவில்லை, பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அரசியலமைப்பில் அதிகாரப் பிரிவினையை நிறைவேற்றுவதற்கு இவற்றைச் செய்யமுடியும் என்பதை நினைவுபடுத்தினோம். அவர்களுக்கு விபரித்து கூறினோம். எனினும் அவர்கள் இதுவரையில் சரியான பதில் எதுவும் கூறவில்லை. இதுபற்றி ஒரு வாரத்தில் தெரிவிப்போம் என்றனர். ஒரு வாரத்தில் முடிவு தெரிவித்தால் மீண்டும் சந்திப்போம் என தீர்மானித்தோம். முன்னதாக 4 நாட்கள் சந்திக்க முடிவு செய்தோம், ஆனால் தீர்மானம் எட்டாத வரையில் சந்திக்க மாட்டோம்’ என தெரிவித்துள்ளார்.