மலையக கட்சிகளுடனும் ஜனாதிபதி பேசுவதாக கூறினார் – மனோ

இப்போது வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடுவதை போன்று மலையக கட்சிகளுடனும் உரையாடுவேன் என்பதை இங்கு வந்துள்ள மனோ கணேசனுக்கு உறுதி கூற விரும்புகிறேன். அதேபோல் முஸ்லிம் கட்சிகளுடனும் உரையாடுவேன் என பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் கட்சிகளுடன் இன்று இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் பேசுகிறேன். ஆனால், அது மாத்திரம் போதாது. நான் இப்படி கூறும்போது, இந்நிகழ்வில் கலந்துக்கொண்டுள்ள திரு. மனோ கணேசன் என்னை உற்று நோக்குகிறார். வடக்கு கிழக்கு கட்சிகளுடன் கலந்துரையாடுவதை போன்று மலையக கட்சிகளுடனும் உரையாடுவேன் என நான் அவருக்கு உறுதி கூற விரும்புகிறேன்.

முஸ்லிம் கட்சிகளுடனும் நான் பேசுவேன். இலங்கையில் சிங்களவர், இலங்கை தமிழர், மலையக தமிழர், முஸ்லிம்கள் என இனக்குழுக்கள் வாழ்கிறார்கள். அனைவரையும் இணைத்து இலங்கை தேசத்தை கட்டி எழுப்புவதே என் நோக்கம்.

அனைவருக்கும் வெவ்வேறு பிரச்சினைகள் உள்ளன. ஆகவே எல்லாவற்றையும் ஒன்றாக ஒரே இடத்தில் பேச முடியாது. ஒன்றுடன் ஒன்று சிக்கி சிக்கலை ஏற்படுத்தும். ஆகவே வெவ்வேறு இனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுடன் வெவ்வேறாக பேச முடிவு செய்துள்ளேன். கடைசியில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இலங்கை தேசத்தை கட்டி எழுப்புவோம்” என குறித்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றியதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர், அமைச்சர்கள், நசீட் அஹமத், அலி சப்ரி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் உட்பட பல்வேறு பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மலையக கட்சிகளுடனும் ஜனாதிபதி பேசுவதாக கூறினார் - மனோ
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version