நுவரெலியா, நானுஓயா, ரதெல்ல பிரதேசத்தில் நேற்று (20.01) இடம்பெற்ற பயங்கர வாகன விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (20.01) பிற்பகல் பஸ், வேன் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பு, Thurstan கல்லூரி மாணவர்களை ஏற்றிக்கொண்டு நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி கல்வி சுற்றுலா சென்று கொண்டிருந்த பேரூந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிதுள்ளனர்.
வாகனங்கள் மோதியதில், பேருந்து சாலையை விட்டு விலகி ஒரு பாறையில் மோதி நின்றுள்ளது.
பேருந்தில் பயணித்த 41 பாடசாலை மாணவர்கள் உட்பட 53 பேர் காயமடைந்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் வேனில் பயணித்த 6 பேரும் முச்சக்கரவண்டியின் சாரதியும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 08 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுமிகளும் 13 வயதுடைய சிறுவனும், 26 மற்றும் 27 வயதுடைய மூன்று ஆண்களும் 43 வயதுடைய பெண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் ஹட்டன் நானும்பாய பிரதேசத்தில் வசிப்பவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை விபத்தில் சிக்கிய மாணவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தேவை ஏற்பட்டால் மேலதிக வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும், அதன்படி எம் ஐ 17 ரக ஹெலிகொப்டரை ரத்மலானை விமானப்படை தளத்தில் விமானப்படை தயார் நிலையில் வைத்துள்ளதாகவும் விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அதிபர், பெற்றோர் மற்றும் முன்னாள் மாணவர்களை சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நேற்று இரவு பாடசாலையில் கலந்துரையாடியதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அதன்படி நேற்று இரவு நுவரெலியா வைத்தியசாலைக்கு இரண்டு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
காயமடைந்த மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.