2022ம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று (23) ஆரம்பமாகவுள்ளது.
இந்த உயர்தரப் பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் 2,200 நிலையங்களில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த ஆண்டுக்கான பரீட்சைக்கு 331,709 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
இன்று ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதேவேளை, பரீட்சார்த்திகள் செல்லுபடியாகும் அடையாள அட்டை மற்றும் பரீட்சை சீட்டுகளுடன் உரிய நேரத்திற்கு பரீட்சை நிலையத்திற்கு வருமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் விளக்கமளித்துள்ளார்.
“பிள்ளைகள் அனைவரும் சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும். பரீட்சை நிலையத்தில் அரை மணி நேரத்திற்கு முன்பே பிள்ளைகளை அமரவிடுமாறு கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். கையடக்க தொலைபேசிகள், எலக்ட்ரானிக் சாதனங்கள், ஸ்மார்ட் கடிகாரங்கள், புளூடூத் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் போன்ற பொருட்களை வைத்திருக்க தடை விதித்துள்ளோம். இவற்றை மீறி செயற்பட்டால் எதிர்காலத்தில் பரீட்சைகளுக்கு தோற்ற ௫ ஆண்டுகால தடை விதிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
“மேலும் இரண்டாம் பகுதி வினாத்தாளுக்கு 10 நிமிடங்கள் மேலதிகமாக வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பரீட்சை காலத்தில் மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக விசேட பஸ் சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திரு.நிலான் மிராண்டா தெரிவித்தார்.
இதேவேளை, உயர்தரப் பரீட்சையின் பாதுகாப்புக் கடமைகளுக்காக 1,625 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பரீட்சை நிலையங்கள், ஒருங்கிணைப்பு நிலையங்கள், பிராந்திய மற்றும் மத்திய சேகரிப்பு நிலையங்கள், வினாத்தாள் மதிப்பீட்டு நிலையங்கள் மற்றும் ஏனைய இரகசிய ஆவணங்களின் பாதுகாப்புக்காக அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.