இந்தியா, ஒடிஷா மாநிலத்தின் சுகாதரத்துறை அமைச்சர் நபா கிஷோர் டாஸ் அவரது முன்னாள் மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகஸ்த்திரனால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று(29.01) நண்பகல் 12.10 அளவில் ஒரு நிகழ்வுக்குக்காக சென்ற அமைச்சர், வாகனத்திலிருந்து இறங்கி தனது ஆதரவாளர்களுக்கு கையசைத்த வேளையில் மிக நெருக்கமாக இருந்த உதவி உப பொலிஸ் அத்தியசட்சகரினால் சுடப்பட்டுள்ளார். இரண்டு சுற்று சூடுகளுக்கு பின்னர் அவரை பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் சிப்பாய் ஆகியோர் தடுத்து துப்பாக்கியினை ஆகாயத்தை நோக்கி நகர்த்தியதனை தொடர்ந்தது வேட்டுக்கள் வான் நோக்கி சென்றுள்ளன. அதன் போது பொலிஸ் அத்தியட்சகர் காயத்துக்குள்ளாகியுள்ளார். இன்னுமொருவரும் காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
சூட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர், மேலதிக சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாலை 8 மணிக்கு இறந்துவிட்டதாக வைத்தியசாலையினால் அறிவிக்கப்பட்டது. அவரது உடலினுள் புகுந்த சன்னம் இதயம் மற்றும் நுரையீரல் ஆகிய பகுதிகளை துளைத்து அதிக இரத்தப்பெருக்கு ஏற்பட்டமையினால் இறப்பு நிகழ்ந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூட்டினை நடாத்திய பொலிஸ் அதிகாரி மன நலம் பாதிக்கப்பட்டவர் எனவும், மன நல சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் விசாரணைகளின் போது அவருக்கு சிகிச்சை வழங்கிய வைத்தியர் மற்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை நீண்ட நாள் திட்டமிட்ட கொலையா அல்லது தற்செயலாக நடைபெற்றதா என்பது தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.