தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை இலங்கையின் கிழக்குக் கரையை அடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று இரவு திருகோணமலைக்கு கிழக்கே 180 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் விளைவாக, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 150 மில்லிமீற்றர் வரை மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் ஏனைய இடங்களில் மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நாளை (02.02) வரை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என மீனவ மற்றும் கடற்படை சமூகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.