75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நினைவு முத்திரை வெளியீடு!

75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரை மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட நினைவு நாணயம் என்பவற்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (02.02) முற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

நினைவு முத்திரையை வெகுசன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவும் நினைவு நாணயத்தை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால்
வீரசிங்கவும் ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

தபால் திணைக்களத்தின் பாரம்பரிய நடவடிக்கைகளுக்கு அமைவாக 50 ரூபா பெறுமதியுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த நினைவு முத்திரை மற்றும் அதன் முதல் நாள் கடித உறை என்பன இன்று முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் உப தபால் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும்.

அத்துடன் கண்டி, திருகோணமலை, குருநாகல், காலி மற்றும் நீர்கொழும்பு ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ள விசேட முத்திரை கருமபீடங்கள் ஊடாக இந்த நினைவு முத்திரை மற்றும்
முதல் நாள் கடித உறையை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளை இலங்கை முத்திரைப் பணியகம் மேற்கொண்டுள்ளது.

75 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டள்ள முத்திரை கண்காட்சி மற்றும் அருங்காட்சியக கண்காட்சி என்பன பெப்ரவரி
6ம் திகதி முதல் 12ம் திகதி வரை காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை கொழும்பு 10 டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் தலைமையக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள 1000 ரூபா பெறுமதியுள்ள நினைவு நாணயம் புழக்கத்திற்கு விடப்பட மாட்டாது என்பதோடு, இது இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட 71 வது நினைவு நாணயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நினைவு நாணயத்தில் ’75’ என்ற எண் பெரிதாக காட்டப்பட்டுள்ளதோடு இலங்கையின் தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்துள்ள மாதிரிவடிவம் ஒன்றும் அதன் மையத்தில் பதிக்கப்பட்டுள்ளது. நாணயத்தைச் சுற்றி ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் ‘சுதந்திரக் கொண்டாட்டம்’ என்ற வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளது. நாணயத்தின் கீழ் பகுதியில் ‘1948 – 2023’ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது.

 

75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நினைவு முத்திரை வெளியீடு!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version