மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இதன்போது கட்சி, தொழிற்சங்க பேதங்களின்றி மக்களுக்கு உரிய வகையில் வீடுகள் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் ஊவா மாகாணத்திலுள்ள சபைகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடலும், தேர்தல் பிரச்சார ஆரம்பக்கூட்டமும் பண்டாரவளை, மாநகரசபை மண்டபத்தில் ஜீவன் தொண்டமான் தலைமையில் நேற்று (05.02) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், நம்மை எதிர்த்துவரும் சவால்களை எதிர்கொண்டு நிற்கும் நோக்கிலேயே நெருக்கடியான சூழ்நிலையிலும் நான் அமைச்சு பதவியை ஏற்றேன். மாறாக பதவி ஆசையில் அல்ல எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், “ மக்களுக்கு சேவை செய்யவே நான் அரசியலுக்கு வந்துள்ளேன். எனவே, மாலை, பொன்னாடைகள் வேண்டாமென ஏற்கனவே கூறியுள்ளேன். ஆகவே எனக்காக கொண்டுவந்த மாலைகளை அப்படியே கோவிலுக்கு கொண்டுசென்று சாமிக்கு அணிவித்து ஆசிபெறுங்கள். எமது தலைவர் ஆறுமுகன் தொண்டமானுடன் தோளோடு தோள் நின்று பதுளையில் சேவல் கொடியை ஏற்றிய அனைத்து சொந்தங்களுக்கும் நன்றி என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
