ஆசிய விளையாட்டு போட்டி – Fun Run நிகழ்வு

ஆசிய விளையாட்டு போட்டி 2022, இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் சீனாவின் கன்ஸூவில் நடைபெறவுள்ளது. 2022 ஆம் ஆண்டு நடைபெறவேண்டிய இந்த விளையாட்டு தொடர் கொரோனா காரணமாக 2023 ஆம் ஆண்டுக்கு பிற்போடப்பட்டது.

இந்த நிகழ்வின் முன்னோடி நிகழ்வுகள் ஆரம்பித்துள்ளன. நான்காம் திகதி மாலைதீவுகள் நாட்டில் முன்னோடி நிகழ்வான Fun Run நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வு நாளை(07.02) இலங்கையில், கொழும்பு துறைமுக நகரில்(Fort City) நடைபெறவுள்ளது.

இலங்கை ஒலிம்பிக் குழுவின் ஏற்பாட்டில் நாளை மாலை 4.30 இற்கு இந்த நிகழ்வு ஆரம்பிக்கவுள்ளது. இலங்கையின் கலாச்சரத்தை பிரதிபலிக்கும் விளையாட்டு மற்றும் கலை நிகழ்வுகளுடன் 2 கிலோ மீட்டர் தூர ஓட்ட நிகழ்வும் நடைபெறவுள்ளது.

சீனாவின் முதலீட்டுடன் நிர்மாணிக்கப்பட்டுவரும் துறைமுக நகரில் சீனாவில் நடைபெறும் விளையாட்டு நிகழ்வுக்கான முன்னோடி நிகழ்வினை நடாத்துவது பொருத்தமானதாக அமைந்துள்ளதாக ஒலிம்பிக் குழுவின் செயலாளர் மக்ஸ்வெல் டி சில்வா இன்று(06.02) ஒலிம்பிக் குழு தலைமையக கேட்பர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பில் ஆசிய விளையாட்டு தொடரின் விளையாட்டுக்களுக்கான உதவி பணிப்பாளர் வு ஜியான்சொங், ஆசிய விளையாட்டு தொடரின் ஊடக மற்றும் தொடர்பாடல் அலுவலகர் ஜி ஜியாஞ்ஜங், ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் விளையாட்டு சேவைகளின் அலுவலகர் போ ஹன்யுவான் ஆகியோருடன் இலங்கை ஒலிம்பிக் குழுவின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம், செயலாளர் மக்ஸ்வெல் டி சில்வா, பொருளாளர் காமினி ஜயசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாளை நடைபெறவுள்ள நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், விளையாட்டு வீர வீராங்கனைகள், விசேட விருந்தினர்கள், என பலர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை ஆசிய விளையாட்டு போட்டிகளில் இலங்கை சார்பாக கலந்து கொள்ளவுள்ள வீர வீராங்கனைகள் தொடர்பில் முழுமையான இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை என ஒலிம்பிக் குழு தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் தெரிவித்தார். இருப்பினும் கிரிக்கெட், ரக்பி, கபடி போன்ற விளையாட்டுகளிலும், மெய்வல்லுனர் போட்டிகளில் 15 அளவிலான வீர வீராங்கனைகளும் பங்குபற்றும் வாய்ப்புகள் உள்ளதாகவும், 8 ஆம் திகதி விளையாட்டு அமைச்சருடன் நடைபெவுள்ள கூட்டத்தின் பின்னர் பங்குபற்றவுள்ளவர்களின் விபரம் தொடர்பில் தகவல் வெளியிட முடியுமென மக்ஸ்வெல் டி சில்வா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டி - Fun Run நிகழ்வு
ஆசிய விளையாட்டு போட்டி - Fun Run நிகழ்வு
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply