நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு UNDP ஆதரவு

நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு இலங்கைக்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர் என ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவு செலவு திட்டத்தில் நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை சேர்ப்பது தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் நிலைபேண்தகு பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் ஆனந்த மலவிதந்திரி ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதிநிதிகளாக அதன் வதிவிடப் பிரதிநிதி அசூஸா குபோட்டா(Azusa Kubota) வரவு செலவுத் திட்ட ஆலோசகர் ஆசிப் ஷா(Asif Shah), ஒருங்கிணைப்பு நிபுணர் துலானி சிறிசேன, கொள்கை, ஆராய்ச்சி மற்றும், இணைப்பு உதவியாளர் அப்ரா மொஹமட் (Afraa Mohamed) ஆகியோர் பங்குபற்றினர்.

நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை, பொது நிதி முகாமைத்துவ முறைமைகளுடன் ஒருங்கிணைப்பது தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அபிவிருத்தி இலக்குகள் மற்றும் வரவு செலவுத்திட்டத்தின் முக்கிய நன்மைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

வரவு செலவுத் திட்ட இடைவெளிகளைக் குறைப்பதற்காக புதுபிக்கப்பட்ட தரவுகளுடன் கூடிய பயனுள்ள அடிப்படையை வழங்குதல், சமூகத் துறையுடன் தொடர்புடைய செலவினங்களைப் பாதுகாப்பதற்காக மிகச் சிறந்த வழிமுறைகளை அறிமுகப்படுத்தல், நிதி இடைவெளிகளைக் கண்டறிந்து, அவற்றைக் குறைப்பதற்கான வழிமுறைகளில் கவனம் செலுத்தல், கொள்கை ஒருங்கிணைப்பை மேம்படுத்தல் மற்றும் பொது முதலீடுகளில் உள்ள பணத்திற்கு அதிக மதிப்பைப் பெற உதவுதல், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்காக பொது நிதி ஒதுக்கீடுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தல், வளங்களைத் திரட்டுதல் மற்றும் நிலையான வளர்ச்சிக்கென முறையான திட்டமிடலை வழங்குவதன் மூலம் அரசாங்க நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், இலக்குகள்/காலநிலை/பாலின அடிப்படையிலான வரவு செலவுத் திட்ட இலக்குகள் மூலம் வருடாந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்னுரிமை வழங்க வேண்டிய விடயங்கள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் இதனால் ஏற்படக்கூடிய நடைமுறைச்சிக்கல்கள் மற்றும் அந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
இந்நிகழ்வில் நிலைபேண்தகு அபிவிருத்திச் சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பணிப்பாளர் நாயகம் சமிந்திரி சபரமாது மற்றும் உதவிப் பணிப்பாளர் நதீகா அமரசிங்க, ஜனாதிபதியின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ராஜித அபேகுணசேகர மற்றும் பணிப்பாளர் சஜன சூரியாரச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு UNDP ஆதரவு
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply