தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் நலமுடன் இருக்கிறார், பிரபாகரனின் அனுமதியுடன் இதனை அறிவிக்கிறேன் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் அறிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற யுத்தத்தில் 2009ம் ஆண்டு இலங்கை ராணுவத்தால் பிரபாகரன் படுகொலை செய்யப்பட்டார் என கூறப்பட்டது, இதற்கு சான்றாக பிரபாகரன் உடல் என ஒன்றும் காட்டப்பட்டது எனினும் அதில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரபாகரன் குறித்து மாறுபட்ட பல தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. பிரபாகரன் இறந்தது உண்மை என ஒருதரப்பும் இல்லை அவர் உயிருடன் இருக்கிறார் என ஒருதரப்பும் தெரிவித்தது.
இந்நிலையில் தஞ்சாவூரில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது பிரபாகரன் குடும்பத்தினர் தம்முடன் தொடர்பில்தான் இருக்கின்றனர் எனவும் பிரபாகரன் உயிருடன் நலமுடன் இருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் விரைவில் வெளியே வருவார் எனவும் அவருடைய அனுமதியுடன் தான் இதனை அறிவிக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிக்கையை பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ளார்.
