மின்சாரம், காகிதம் மற்றும் புதிய இயந்திரங்களின் விலை அதிகரிப்பு காரணமாக புகைப்பட பிரதி ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, அடையாள அட்டையின் புகைப்பட பிரதி ஒன்றின் விலை 10 ரூபாவிலிருந்து 15 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், A4 அளவிலான புகைப்பட பிரதி ஒன்றின் விலை 15 ரூபாவிலிருந்து 20 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா தெரிவித்தார்.
மேலும், அச்சிடப்பட்ட கருப்பு வெள்ளை பிரதி 5 ரூபாவாலும், நிறப் பிரதி 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மின்கட்டண உயர்வு மற்றும் காகிதம், டோனர் போன்றவற்றின் விலையேற்றம், இயந்திரம் பழுதுபார்ப்பு போன்றவற்றின் விலையேற்றம் காரணமாக இவ்வாறு விலைகளை அதிகரிக்க வேண்டியதாயிற்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை படிக்கும் பிள்ளைகளிடமும், அவர்களின் பெற்றோரிடமும் இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு மன்னிப்புக் கேட்பதாகவும், தம்மால் இதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இவ்வாறானதொரு நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
