இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலலான போர்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று டெல்லியில் (17.02) ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இன்று (18.02) இரண்டாம் நாள் நிறைவுபெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 78.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 263 ஓட்டங்களை பெற்றது. இதில் உஸ்மன் காவாஜா 81 ஓட்டங்களையும், பீட்டர் ஹாண்ட்ஸ்கொம்ப் ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களையும், பட் கம்மின்ஸ் 33 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஷமியின் வேகப்பந்து வீச்சு, அஷ்வின் – ஜடேஜாவின் சுழற்பந்துவீச்சு கலவை அவுஸ்திரேலியா அணியினை கட்டுப்படுத்தியது. ஷமி ஆரம்பத்தியிலேயே விக்கெட்டினை தகர்த்துக் கொடுக்க அஷ்வின் – ஜடேஜா மத்திய வரிசையினை பதம் பார்த்தது. ஷமி 4 விக்கெட்களையும், அஷ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
இந்தியா அணி 83.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 262 ஓட்டங்களை பெற்றது. இந்தியா அணி தமது முதலாவது விக்கெட்டினை இழந்தவுடன் அடுத்தடுத்து 04 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. விராட் கோலி மற்றும் ரவீந்தர் ஜடேஜா ஆகியோர் இணைப்பாட்டத்தை ஏற்படுத்தி ஜடேஜா ஆட்டமிழந்தார். பின்னர் மீண்டும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் அக்ஷர் படேல், அஷ்வின் ஆகியோர் நல்ல இணைப்பாட்டத்தை ஏற்படுத்தி இந்தியா அணியினை மீட்டனர். இருவரும் எட்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக 114 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். இன்றும் அக்ஷர் படேல் சிறப்பாக துடுப்பாடி 74 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். விராட் கோலி 44 ஓட்டங்களையும், அஷ்வின் 37 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் நேதன் லயோன் 5 விக்கெட்களையும், டொட் மேர்ப்பி, மத்தியூ குன்மான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள். பட் கமின்ஸ் 1 விக்கெட்டினை கைப்பற்றினார்.
இரண்டாவது இன்னிங்சில் துடுப்பாடி வரும் அவுஸ்திரேலியா அணி 12 ஓவர்களில் 1 விக்கெட்டினை இழந்து 61 ஓட்டங்களை பெற்றுள்ளது. ட்ரவிஸ் ஹெட், மார்னஸ் லபுஸ்சேஞ் ஆகியோர் துடுப்பாடி வருகின்றனர். ஜடேஜா முதலாவது விக்கெட்டினை கைப்பற்றினார்.
அவுஸ்திரேலியா அணி சார்பாக சுழற்பந்து வீச்சாளர் மத்தியூ குன்மான் நேற்று அறிமுகத்தை மேற்கொண்டார்.
இறுக்கமான இந்த போட்டியில் அவுஸ்திரேலியா அணிக்கான வெற்றி வாய்ப்பு ஒன்று உருவாகியுள்ளது. இந்தியா அணிக்கு ஏற்றால் போல சுழற்பந்து வீச்சு ஆடுகளம் தயார் செய்ய அந்த பொறிக்குள் இந்தியா அணியே சிக்கிக்கொண்டது.
நான்காவது இன்னிங்சில் இந்தியா அணி அவுஸ்திரேலியா அணி பெறும் வெற்றியிலக்கை துரத்தியடிப்பது கடினமாகும்.
