மதிவாணன் தலைமையிலான குழு கிரிக்கெட் தேர்தலுக்கு விண்ணப்பிக்கவில்லை!

இலங்கை கிரிக்கெட்டின் 2023 ஆம் ஆண்டு தேர்தலுக்கு மதிவாணன் தலைமையிலான குழு விண்ணப்பிக்கவில்லை. நேற்று(28.02) இந்த தேர்தலுக்கான விண்ணப்பத்தினை வழங்கும் இறுதி திகதியாகும். ஆனால் மதிவாணன் தலைமையில் நிஷாந்த ரணதுங்க மற்றும் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் இம்முறை தேர்தலில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தக் குழு தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கவில்லை.

இலங்கை விளையாட்டு துறை அமைச்சினால் விளையாட்டு நிறுவனங்களின் சட்ட திட்டங்களில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் இலங்கை கிரிக்கெட் பழைய சட்டங்களுக்கு அமைவாக தேர்தலை அறிவித்து தேர்தலுக்கான விண்ணப்பத்தினையும் கோரியிருந்தது. பழைய முறையில் தேர்தலை நடாத்த முடியாது என்ற காரணத்துக்காக தேர்தலில் போட்டியிடவில்லை என மதிவாணன் தெரிவித்துள்ளார். விளையாட்டு துறை அமைச்சின் புதிய சட்டத்துக்கு ஆதரவாக தான் சத்தியக் கடதாசி வழங்கியதாக கூறிய மதிவாணன், தற்போதைய கிரிக்கெட் நிர்வாகத்தின் பலர் புதிய சட்டத்துக்கு அமைய அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் கூறியள்ளார்.

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சினால் அமுற்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டத்துக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் நீதிமன்றத்தில் குறித்த சட்டத்துக்கு தடை விதிக்க கோரிய மனு ஏற்றுக்கொள்ள்ளப்பட்டு ஜூன் மாதம் வரையில் குறித்த சட்டத்தை நடைமுறைப்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் இலங்கை கிரிக்கெட் தேர்தல் நடைபெறவுள்ளது.

விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள இடைக்கால தடைக்கு எதிராக மேன்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

இலங்கை கிரிக்கெட், T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் செல்வழிக்கப்பட்ட பணம் தொடர்பில் விளையாட்டு அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவினால் விசாரிக்கப்பட்டு இலங்கை கிரிக்கெட்டுக்கு எதிராக அந்த அறிக்கை வழங்கப்பட்டுள்ள நிலையில் விளையாட்டு துறை அமைச்சரினால் இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபை கலைக்கப்பட்டு இடைக்கால நிர்வாக சபை உருவாக்கப்படலாமென ஏற்கனவே பேச்சுக்கள் அடிபட்டன.

இலங்கை கிரிக்கெட் தேர்தலுக்கு தற்போதைய விண்ணப்பத்தின் படி தற்போதைய தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான குழுவுக்கு எதிராக எவரும் விண்ணப்பிக்கவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த முறையும் அவர் போட்டியின்றி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார்.

மதிவாணன் தலைமையிலான குழு கிரிக்கெட் தேர்தலுக்கு விண்ணப்பிக்கவில்லை!

Social Share

Leave a Reply